சிறப்புக் கட்டுரைகள்

பணி ஓய்விற்கு பிறகும்... மருத்துவ சேவையாற்றும் செவிலியர் + "||" + Even after retirement Medical service Nurse

பணி ஓய்விற்கு பிறகும்... மருத்துவ சேவையாற்றும் செவிலியர்

பணி ஓய்விற்கு பிறகும்... மருத்துவ சேவையாற்றும் செவிலியர்
கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் உயிரிழப்பு கள் அதிகரித்து இருக்கிறது.
குறுகிய கால இடைவெளிக்குள் நொய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்துவிட்டது. மருத்துவ பணியாளர்களும் நோய் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவின் ருத்ர தாண்டவத்தை கட்டுப்படுத்த நிறைய பேர் தாமாகவே முன்வந்து முன்கள பணியாளர்களாக செயல்பட்டுக்கொண் டிருக்கிறார்கள். ஓய்வு பெற்றவர்களும் தங்களால் இயன்ற சமூக சேவைகளை செய்கிறார்கள். கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் ஏ.எஸ். கீதாவும் கொரோனா முன்கள பணியில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்.

அங்குள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், மருத்துவ சேவை கிடைக்காமலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதை கண்டு வேதனை அடைந்திருக்கிறார். மக்கள் நோயின் பிடியில் சிக்கி இருக்கும் போது ஓய்வு காலத்தை சந்தோஷமாக கழிப்பதற்கு அவர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. தனது செவிலியர் பணி அனுபவத்தை கொண்டு தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தார். ஒரு செவிலியராக தனது சேவையை தொடருவதோடு மட்டுமல்லாமல், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும், கொரோனா நோயாளிகளின் குடும்ப உறுப் பினர்களுக்கு மன நல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

‘‘எனக்கு நன்கு அறிமுகமான இரண்டு பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து போனார்கள். அது பற்றி அறிந்ததும் மன வேதனை அடைந்தேன். அவர்களை போல் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு என்னால் எந்த வகையில் உதவி செய்ய முடியும் என்று யோசித்தேன். அப்போது எனது சகோதரர், ‘எஸ்.வி.ஒய்.எம்’ என்னும் அமைப்பு கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாகவும், அந்த பணிக்கு செவிலியராக உங்கள் பங்களிப்பை அளிக்க முடியுமா?’ என்றும் கேட்டார். என்னால் நிதி ரீதியாகத்தான் உதவி செய்ய முடியவில்லை. செவிலியராக மக்களுக்கு சேவை செய்வது எனது தொழிலின் ஒரு பகுதியாகும். எனவே எனது சேவையை தொடர முடிவு செய்தேன்’’ என்கிறார், 66 வயதாகும் ஏ.எஸ்.கீதா.

இந்த கொரோனா காலகட்டத்தில் மூத்த குடிமகனான தனக்கு ஏற்படும் ஆபத்து குறித்து நன்றாக தெரியும் என்றும், அதனை கவனத்தில் கொண்டே எனது சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்றும் சொல்கிறார். ‘‘தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதை உறுதி செய்கிறேன். எனது வீட்டில் இருக்கும் அனைவருமே வயது முதிர்ந்தவர்கள்தான். 96 வயதான என் அம்மா என்னுடன் வசித்து வருகிறார். கொரோனா பற்றிய பயம் இருந்தாலும், மருத்துவ சேவையைத் தொடருவதற்காக அந்த பயத்தை ஒதுக்கி வைத்துள்ளேன்” என்பவர், தனது வீட்டை ஆக்சிஜன் செறிவூட்டிகளை சேமித்து வைக்கும் இடமாக மாற்றி இருக்கிறார். யாருக்காவது ஆக்சிஜன் செறிவூட்டி தேவைப்படுவதாக அழைப்பு வந்தால் உடனே ஆட்டோவில் எடுத்து சென்று மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.