அலெக்சாண்டர் கிரகாம் பெல்


அலெக்சாண்டர் கிரகாம் பெல்
x
தினத்தந்தி 2 Aug 2021 3:58 PM GMT (Updated: 2 Aug 2021 3:58 PM GMT)

இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு தொலை தொடர்பு சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகுந்த பயனுள்ளதாக கருதப்படுவது, தொலைபேசி. இதனை முதன்முதலில் கண்டறிந்தவர், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆவார்.

இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு தொலை தொடர்பு சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகுந்த பயனுள்ளதாக கருதப்படுவது, தொலைபேசி. இதனை முதன்முதலில் கண்டறிந்தவர், அலெக்சாண்டர் கிரகாம் பெல் ஆவார். அவரை பற்றி காண்போம்...!

ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பெர்க் நகரத்தில் அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் மற்றும் எலிசா கிரேஸ் ஆகியோருக்கு கடந்த 1847-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் பிறந்தார். அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் தனது குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரது பெயரை இணைத்து தனது மகனுக்கு அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று பெயர் சூட்டினார். பேராசிரியராக விளங்கிய அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது?, உதடுகளின் அசைவை கொண்டு பேசுவதை காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதை பற்றி பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். இதற்கு காரணம், அவரது மனைவி காது கேளாத மாற்றுத்திறனாளி என்பதே என்று கூறப்படுகிறது.

அலெக்சாண்டர் கிரகாம் பெல் தனது 8 வயதில் பியானோ வாசிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். 10 வயதில் பள்ளிக்கு செல்ல நாட்டமில்லாமல் போனது. லத்தீன், கிரேக்க மொழிகளை படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளை பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தை செலவிட்டார். ஒருவர் பேசுவதை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தபோது, அறிமுகம் ஆன காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை விரும்பி திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவரது குடும்பம், கனடாவுக்கு குடி பெயர்ந்தது. அங்கு போஸ்டன் நகரத்தில் வசித்தபோது, காது கேளாதோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு பள்ளியை தொடங்கினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளை கற்பித்தார். அவரது ஆய்வுமுறை, அறிவாற்றலை அறிந்த பாஸ்டன் பல்கலைக்கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக அவரை பணியில் அமர்த்தியது.

பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார், அலெக்சாண்டர் கிரகாம் பெல். அப்போது தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று அவருக்கு தோன்றியது. அப்போது அவருக்கு 18 வயது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபட்டார்.

அந்த காலத்தில் பேச்சொலிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தந்தி மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறை அவரது ஆராய்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருந்தது. 1875-ம் ஆண்டு அவரது முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. அதாவது பேச்சொலிகளை தந்தி மூலம் அனுப்ப முடிந்தது. ஆனால் முதலில் தெளிவில்லாமல் இருந்தது. 1876-ம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசியை உருவாக்கி, அதன் முலம் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் பேசியது, ‘வாட்சன் இங்கே வாருங்கள், உங்களை காண வேண்டும்’ என்பதுதான். இதனை வாட்சனால் தெளிவாக கேட்க முடிந்தது. ஆனால் அலெக்சாண்டர் கிரகாம் பெல் கண்டுபிடித்த அந்த தொலைபேசியை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் சோர்வடைந்து போனார் என்றே கூறலாம். பின்னர் பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியை பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்து பயன்படுத்திய பிறகுதான் அதன் பெருமை உலகெங்கும் பரவியது. பின்னர் அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையை பெற்றார், அலெக்சாண்டர் கிரகாம் பெல். 1877-ம் ஆண்டு தனது உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து ‘பெல் தொலைபேசி கம்பெனி’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஒன்றை தொடங்கினார். மேலும் தொலைபேசியை கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு வழங்கிய 50 ஆயிரம் பிராங்க் பரிசு தொகையை கொண்டு வோல்டா ஆய்வு சாலை என்ற அமைப்பை நிறுவினார். அலெக்சாண்டர் கிரகாம் பெல் தொலைபேசியை மட்டுமல்ல பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்சன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராம போன் போன்றவற்றையும் கண்டுபிடித்தார். மேலும் விமானம் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. ஆனாலும் விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியை கண்டுபிடித்தார். பிற்காலத்தில் கடல் விமானத்தை சீர்திருத்தி அமைப்பதில் வெற்றி கண்டார். இது மட்டுமின்றி பாலைவனங்களில் படைவீரர்களுக்கு உதவும் வகையில் காற்றில் உள்ள ஈரத்தை வடிகட்டி தரக்கூடிய அரிய கருவியை கண்டுபிடித்தார். காது கேளாதோருக்கு பேச்சு பயிற்சியை வளர்ப்பதற்கான சங்கம் ஒன்றை நிறுவினார். கண் தெரியாதவர்களுக்கு பிரெய்லி முறையை கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பல உதவிகளை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியல் அறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்று இருந்தார். 1882-ம் ஆண்டில் அலெக்சாண்டர் கிரகாம் பெல் அமெரிக்க குடியுரிமையை பெற்றார். 1888-ம் ஆண்டில் உலக புவியியல் கழகத்தை ஆரம்பித்த உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்த கழகத் தின் 2-வது தலைவராகவும் விளங்கினார்.

பிரெஞ்சு அரசு வழங்கிய ‘லெஜியன் ஆப் ஆனர்’, அகாடமிக் பிரான்சிஸ், வோல்டா பரிசு, ஆல்பெர்ட் பதக்கம், எடிசன் பதக்கம் போன்றவற்றை பெற்று உள்ளார். இது தவிர அவருக்கு, உர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. 1922-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் அலெக்சாண்டர் கிரகாம் பெல் காலமானார். அன்றைய தினம், அமெரிக்கா வில் உள்ள அனைத்து தொலைபேசிகளும் 5 நிமிடங் கள் நிறுத்தப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story