சுவிட்ச் போர்டுகள் பொருத்தும் போது...


சுவிட்ச் போர்டுகள் பொருத்தும் போது...
x
தினத்தந்தி 21 Sep 2021 2:39 PM GMT (Updated: 21 Sep 2021 2:39 PM GMT)

ஓர் அறைக்கு என்னென்ன மின்சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன. எவை அவசியம் போன்ற அனைத்து விதமான விஷயங்களுக்கும் குறிப்பு எடுத்துக்கொண்டு எதையும் மறந்துவிடாமல், மின் இணைப்பு பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களிடம் தெரிவித்தால் அவரது பணியும் எளிதாகும்.

படுக்கையறையில் குளிர்சாதன வசதி வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டு அதற்கான மின் வசதிகளைச் செய்யாமல் விட்டுவிட்டு, பின்னர் வீட்டில் குடியேறிய பின்னர் அங்கு குளிர்சாதன வசதியைப் பொருத்த நினைக்கக் கூடாது. அதைவிட குளிர்சாதன வசதி தேவைப்படுகிறதோ-இல்லையோ அதற்கான மின் இணைப்பு வசதிகளைச் செய்துவிட்டால், குளிர்சாதன வசதி தேவைப்படும்போது, அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது போல் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை எடுத்துக்்கொள்ள வேண்டும்.

சுவிட்ச் போர்டுகளில் மின்விளக்கு, மின்விசிறி போன்றவற்றுக்கான சுவிட்சுகளையும் மின்விசிறிக்கான ரெகுலேட்டர், பிளக் பாயிண்டுகள் போன்றவற்றையும் அமைப்பது வழக்கம். இந்த சுவிட்ச் போர்டுகள் விதவிதமாக கிடைக்கின்றன. இவை தரமானதாகவும் வசீகரமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். வீட்டுக்கு நல்ல வண்ணத்தைப் பூசிவிட்டு அந்த அறையில் சுவிட்ச் போர்டுகளை மிகவும் சாதாரணமாக அமைத்தால் வீட்டின் அழகை அது பாதிக்கும். இப்போது, பலவண்ணங்களிலும் பொன்நிறத்திலும் சுவிட்ச் போர்டுகள் கிடைக்கின்றன. அறையின் வண்ணப்பூச்சுக்கு ஏற்ற வகையில் அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எமர்ஜென்சி லைட் எனச் சொல்லப்படும் அவசர கால விளக்குகளுடன் இணைந்த சுவிட்ச் போர்டுகள்கூட இப்போது கிடைக்கின்றன. திடீரென மின்சாரம் தடைப்பட்டாலும் இந்த விளக்கின் ஒளி ஓரளவுக்கு அறைக்கு வெளிச்சம் தரும். ஆகவே, இந்த வகை சுவிட்ச் போர்டுகளையும் பொருத்தலாம். எமர்ஜென்சி லைட் என்பது ஒரு சுவிட்ச் அளவுக்கே இருக்கும். அதே போல் சுவிட்ச் போர்டுகளில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அது டி.வி., கணினி, மடிக்கணினி போன்றவற்றுக்கு மின் இணைப்புத் தரும் பிளக் பாயிண்டுகள். நமது ஊரில் வட்ட வடிவமான பிளக்குகளைப் பயன்படுத்துகிறோம்.

ஆகவே இதற்கான பிளக் பாயிண்டுகள் வட்ட வடிவ பிளக்குகளைப் பொருத்தும் வகையிலேயே இருக்கும், ஒருவேளை நீங்கள் டி.வி., மடிக் கணினி போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்கி வந்திருந்தால் அவை சதுர வடிவ பிளக்குகளைக் கொண்டிருக்கும். அதற்கேற்ற வகையில் சதுர வடிவ பிளக் பாயிண்டுகளை அமைத்துக்கொள்ளவேண்டும். அதே போல் அவசியமான இடத்தில் சுவிட்சுகளையும் பிளக் பாயிண்டுகளையும் பொருத்துங்கள், அவசியப்படாத இடத்தில் எல்லாம் தாறுமாறாகப் பொருத்தினால் அதனால் பொருள் இழப்புதான் ஏற்படும்.

அதே போல் சுவிட்சு போர்டுகள் சரியான இடத்தில் அமைக்கப்படுவதும் அவசியம். கதவைத் திறந்து உள்ளே நுழைந்த உடன் எந்த இடத்தில் சுவிட்ச் இருந்தால் அன்றாட நடவடிக்கைக்கு எளிதாக இருக்குமோ அந்த இடத்தில் சுவிட்சு போர்டை அமைக்க வேண்டும். தவறான இடத்தில் அமைத்துவிட்டால் அனுதினமும் போராட வேண்டி இருக்கும்.

Next Story