சிறப்புக் கட்டுரைகள்

'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட வேண்டியது அவசியமா? + "||" + Is it necessary to get 'booster dose' vaccine?

'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட வேண்டியது அவசியமா?

'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட வேண்டியது அவசியமா?
கொரோனா 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட வேண்டியது அவசியமா? என சென்னை மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
மனித குலத்தையே நடுங்க வைத்த கொரோனா நோய் தொற்று கடந்த ஆண்டு சீனாவில் உதயமாகி உலக நாடுகளை மிரட்டியது. லட்சக்கணக்கான உயிர் களை பறித்ததோடு வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டி போட்டது.

கொரோனா அரக்கன்

கொரோனா என்ற கொடிய அரக்கனை அடக்குவதற்கான பேராயுதமான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலகின் தலைச்சிறந்த மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள் இரவுபகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். 11 மாதங்களில் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியாவில் ‘ஸ்புட்னிக்’ என்ற தடுப்பூசி தயாரானது. அதன்பின்னர் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘ஆஸ்டிரா ஜெனேகா’ என்ற கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. அமெரிக்கா ‘பைசர்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்தியாவில் இதுவரை பல தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டாலும், பிரதானமாக ‘கோவிஷீல்டு’(‘ஆஸ்டிரா ஜெனேகா’) மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் அனைவருக்கும் போடப்பட்டு வருகிறது.

‘பூஸ்டர் ஷாட்’

பல்வேறு வளர்ந்த நாடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், இணை நோய்கள், முதியோர்கள் மற்றும் தடுப்பூசியின் வீரியம் குறைந்து காணப்படுகிறவர்களுக்கு, ‘பூஸ்டர் ஷாட்’ தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில் இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், செக் குடியரசு உள்ளிட்ட 35 நாடுகளில் 3-வது தவணை அல்லது ‘பூஸ்டர் ஷாட்’ போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 101 நாடுகளில் இந்த ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சுகாதாரத்துறையின் தகவல் வருவதற்கு காத்திருக்காமல் நேரடியாக வந்து பூஸ்டர் ஷாட் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 2-வது தவணை தடுப்பூசி போட்டவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கேரளாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தடுப்பூசி போட்டுக்கொண்ட 3,841 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதில் 2,089 பேர் 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

உடனடி தேவை இருக்குமா?

இதற்கு காரணம் கொரோனா 2-வது தவணை தடுப்பூசி போட்டு 8-வது மாதத்தில் இருந்து அதன் வீரியம் குறைவது தான் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்திலும் 2-வது தவணை போட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. உலகின் மிக முக்கிய நாடுகளில் ‘பூஸ்டர் ஷாட்’ தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் இதுபோன்று 3-வது தவணை தடுப்பூசி போடப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு 2 தவணை தடுப்பூசி இன்னும் போடப்படாமல் இருக்கும் நிலையில், இந்தியாவில் ‘பூஸ்டர் ஷாட்’ தேவை உடனடியாக இருக்காது என தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் வீணா பி.மேனன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர் சத்யசேகரன் தகவல்

உலகம் முழுவதும் பல நாடுகளில் 3-வது தவணை தடுப்பூசியான ‘பூஸ்டர் ஷாட்’ போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2-ம் தவணை தடுப்பூசி போட்டு சில மாதங்களில் அதன் வீரியம் குறைவதாலேயே இது அவசிய மாகிறது. இந்த நிலையில் ‘பூஸ்டர் ஷாட்’ தேவை குறித்து டாக்டர் நிஷா மாறன் தலைமையில் இயங்கும் ஸ்ரீபாலாஜி மருத்துவமனையின் ஆராய்ச்சி பிரிவு ‘டீன்’ டாக்டர் பி.டபிள்யூ.சி.சத்யசேகரன் கூறியதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வராமல் தடுக்க தடுப்பூசி அவசியமாகிறது. தடுப்பூசியின் செயல்திறன் 6 முதல் 8 மாதங்கள் வரை இருக்கும் எனப்படுகிறது. ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி முதல் தவணை போட்டு 84 நாட்களில், 2-வது தவணை போடப்படுகிறது. அதன்பிறகு 6 முதல் 8 மாதங்களில் அதன் செயல்திறன் குறைவது இயற்கையே. அப்போது ‘பூஸ்டர் ஷாட்’ எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போட்டால் கண்டிப்பாக செயல்திறன் அதிகரிக்கும். இதையே பல நாடுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளன. இந்தியாவில் இதுவரை 100 கோடி ‘டோஸ்’ போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. அது ஒருபுறமிருந்தாலும், இன்னொரு புறம் 2-ம் தவணை தடுப்பூசி போட்டு 8 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு ‘பூஸ்டர் ஷாட்’ எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போடுவதற்கு அரசு பரிசீலிக்கலாம்.

ஆராய்ச்சியின் முடிவு

தற்போது அனைவருக்கும் 2-ம் தவணை தடுப்பூசி போட்டு முடிக்கவேண்டுமா? அல்லது 3-வது தவணை தடுப்பூசியான பூஸ்டர் ஷாட் தொடங்க வேண்டுமா? என்பதில் எது முதலில் செய்யவேண்டும் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. அனைவருக்கும் 2 தவணைகளில் தடுப்பூசி போடவேண்டும் என்பது கட்டாயம். எனவே அதற்கு தேவையான தடுப்பூசியை தயாரிக்க வேண்டியது முக்கியம்.

மற்ற நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்ற சிகிச்சை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு முதலில் ‘பூஸ்டர் ஷாட்’ போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதேபோல முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு ‘பூஸ்டர் ஷாட்’ போடலாமா? என்று முடிவெடுப்பது நல்லது. 2-ம் தவணை தடுப்பூசி 30 சதவீதம் பேர் மட்டுமே போட்டுள்ள சூழ்நிலையில் அது அதிகரித்தால் ‘பூஸ்டர் ஷாட்’ போடுவதை உடனடியாக தொடங்கலாம். ஆனால் 2-வது தவணை போட்டு முடித்தபிறகு தான் பூஸ்டர் ஷாட் போடமுடியும் என்பதால், 2-வது தவணை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசிய அவசரமாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் ‘பூஸ்டர் ஷாட்’ உடனடி தேவையா? எப்போது தேவை? என்பது குறித்து கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் நடத்தி வரும் ஆராய்ச்சி முடிவில் தான் தெரியவரும்.

ஒருபக்கம் 2-வது தவணை தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே, மற்றொரு பக்கம் 2-வது தவணை போட்டு முடித்து 8 மாதங்கள் ஆன பின்னர் ‘பூஸ்டர் ஷாட்’ போடுவதையும் ஒரே நேரத்தில் தொடங்குவது சாத்தியமா? என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதும் நிச்சயம் ஏற்புடையதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் பரிதாபம்! கொரோனாவால் அக்டோபரில் அதிக உயிரிழப்பு..!
ரஷியாவில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 75,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
2. புதுச்சேரியில் வரும் 6 ஆம் தேதி முதல் 1 - 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 6ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
3. மெட்ரோ ரெயிலில் 6 மாதத்தில் 1.30 கோடி பேர் பயணம்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுபாடுகளில் அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் சேவை கடந்த ஜூன் 21-ந்தேதி முதல் தொடங்கியது.
4. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் கமல்ஹாசன்
கொரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
5. ஒமிக்ரான் அச்சுறுத்தல்: மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஒமிக்ரான் கொரோனா உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.