மருத்துவ கனவை நிறைவேற்றிய கூலி தொழிலாளி


மருத்துவ கனவை நிறைவேற்றிய கூலி தொழிலாளி
x
தினத்தந்தி 5 Dec 2021 12:08 PM GMT (Updated: 5 Dec 2021 12:08 PM GMT)

மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வில் தோல்வி அடைந்து துவண்டு போய் தன்னம்பிக்கை இழப்பவர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார், சாயுஜ்யா சுர்ஜித் ஹன்ஸ்ராம் படேல்.

கூலி தொழிலாளியாக வேலை பார்த்துக்கொண்டே நுழைவு தேர்வுக்கு படித்து தனது மருத்துவ கனவை நனவாக்கி இருக்கிறார்.

இவர் ராஜஸ்தான் மாநிலம் பார்மன் மாவட்டத்தை சேர்ந்தவர். 7-ம் வகுப்பு படித்தபோது ஹன்ஸ்ராம் படேலின் தந்தை இறந்துவிட்டார். அதனால் சிறு வயதில் இருந்தே குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஹன்ஸ்ராம் படேலுக்கு இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சகோதரர் மாற்றுத்திறனாளி. குடும்ப செலவுகளை சமாளிப்பதற்காக தாயாருடன் சேர்ந்து கூலி வேலை செய்தபடியே படிப்பையும் தொடர்ந்திருக்கிறார்.

அவரது கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி இருந்ததால் 10-ம் வகுப்பு வரை தடையின்றி படிப்பை நிறைவு செய்துவிட்டார். உயர்கல்வியை தொடர்வதுதான் சிரமமாகி இருக்கிறது. ஒரு வழியாக மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு அவரது தாய்மாமாவின் ஆதரவு கிடைத்திருக்கிறது. ஜோத்பூரில் உள்ள பள்ளியில் படிப்பை தொடர்ந்திருக்கிறார். அப்போது ‘நீட்’ தேர்வு எழுதுமாறு அவரது மாமா ஊக்கப்படுத்தி இருக்கிறார். அதனால் 12-ம் வகுப்பு படிக்கும்போதே ‘நீட்’ தேர்வுக்கு தயாராகிவிட்டார்.

படிப்பை முடித்ததும் 2019-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதி இருக்கிறார். முதல் முயற்சி பலன் தரவில்லை. 493 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். மீண்டும் கஷ்டப்பட்டு படித்து இரண்டாவது முயற்சியில் 595 மதிப்பெண்கள் பெற்றுவிட்டார். ஆனால் அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுகல்லூரியில் சேருவதற்கு 10 மதிப்பெண்கள் பின் தங்கிவிட்டார்.

ஆனாலும் மனம் தளரவில்லை. கூடுதலாக 10 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் மருத்துவ படிப்பில் சேர்ந்துவிடலாம் என்ற உத்வேகத்துடன் படித்தவர், இந்த ஆண்டு மூன்றாவது முறையாக ‘நீட்’ தேர்வு எழுதி 700-க்கு 627 மதிப்பெண்கள் பெற்றுவிட்டார். அதன்படி அகில இந்திய அளவில் 9,210-வது இடமும், ஓ.பி.சி. பிரிவில் 3,450-வது ரேங்க்கும் பெற்றிருக்கிறார்.

கடும் போராட்டத்திற்கு பிறகு மருத்துவ கனவு நிறைவேறி இருக்கும் ஆனந்தம் ஹன்ஸ்ராம் படேலின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ‘‘புற்றுநோயியல் நிபுணராக வேண்டும் என்பதும், இலவச புற்றுநோய் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதும் தனது லட்சியம்’’ என்கிறார்.

Next Story