பெங்களூரு தோழிகள் கட்டும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்கள்


பெங்களூரு தோழிகள் கட்டும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்கள்
x
தினத்தந்தி 24 Jan 2022 5:02 AM GMT (Updated: 24 Jan 2022 5:02 AM GMT)

கட்டிடக்கலை என்பது விண்ணை முட்டும் அளவுக்குக் கட்டிடங்களை கட்டுவதோ, உள் அலங்காரம் செய்வதோ மட்டுமில்லை. அங்கு வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், போதிய இட வசதியுடன் கட்டமைக்கப்பட வேண்டும்.

இதனை தனது தார்மீக மந்திரமாக கடைப்பிடித்து மற்றவர்களையும் பின்பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார், ஸ்ரீதேவி சாங்கலி. இவர் தனது தோழி ரோஷி பாலுடன் இணைந்து கடந்த 2013-ம் ஆண்டு கட்டுமான நிறு வனத்தை தொடங்கி இருக்கிறார். சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய கட்டுமானங்களை கட்டமைப்பதன் மீது தங்கள் கவனத்தை திருப்பியதற்கான காரணத்தை ஸ்ரீதேவி விளக்குகிறார்.


“தொடக்கத்தில் பாரம்பரிய கட்டிடங்கள், பழைய பண்ணை வீடுகள் மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் கட்டிடங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தினோம். பாரம்பரிய அடையாளம் மாறாமல் புதுப்பொலிவுடன் கட்டுமான பணிகளை மேற்கொண்டோம்.

புதுச்சேரியில் உள்ள ஆரோவில்லில் ஒரு கன்சல்ட்டன்ட் நிறுவனத்தில் இருவருக்கும் வேலை கிடைத்தது. அங்குதான் நாங்கள் அடிப்படை விஷயங்களை கற்றோம். இயற்கையான மூலப்பொருட்களையே கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதையும், சாதாரணமான கட்டிடத்தை அழகான வடிவமைப்புகளுடன் மாற்றுவதையும் அங்கு நேரில் பார்த்து தெரிந்துகொண்டோம்.

பின்பு மண் செங்கற்களைப் பயன்படுத்தும் கட்டுமானப் பணிக்கு ரோஷி சென்றுவிட்டார். பாரம்பரிய கட்டிடங்களை மறுசீரமைக்கும் பணி எனக்கு கிடைத்தது. கிராமப்புற வீடுகள் கட்டும் திட்டத்தில் பணியாற்றிய ரோஷி, மண் செங்கற்களால் ஆன வீடுகளை கட்டும் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். அந்த கட்டுமான திட்டம் எங்களுக்கு பிடித்திருந்தது. அதனால் எங்கள் கட்டுமானப் பணிகளில் எல்லாம் மண் செங்கற்களை பயன்படுத்தத் தொடங்கினோம்.

மதுரையில்தான் எங்களுக்கு முதல் கட்டுமான பணி கிடைத்தது. அங்கு சுற்றுச்சூழலுக்கேற்ற கட்டமைப்பு கொண்ட வீட்டைக் கட்டினோம்’’ என்பவர் கட்டுமான விஷயங்களில் எதிர்கொள்ளும் சிரமங்களை குறிப்பிடுகிறார்.

‘‘வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதோடு நம் பணி முடிந்துவிடுவதில்லை. சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள முடியாது. அவர்களுக்கு பிடித்தமாதிரியில் வடிவமைக்க வேண்டியிருக்கும். மண் செங்கலில் கட்டுமானம் கட்டுவது பற்றி கூறியபோது பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சிலர் தயங்கினார்கள். அது மழையில் கரைந்துவிடாதா? கட்டிடம் நீண்ட காலம் தாங்குமா? என்று கேட்பார்கள். அவர்களை சமாதானப்படுத்துவது எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. நம்மைச் சுற்றிக் கிடைக்கும் இயற்கையான பொருட்களை வைத்தே கட்டுமானப் பணியைச் செய்வதுதான் எங்கள் நோக்கம்.

எல்லா கட்டுமானப் பணிகளுக்கும் மண் செங்கற்களை நாங்கள் பயன்படுத்துவதில்லை. சீதோஷ்ண நிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு வீடுகளை நாங்கள் வடிவமைக்கிறோம். கடந்த 7 ஆண்டுகளில் நாங்கள் இருவரும் 40 கட்டுமானப் பணிகளை முடித்துள்ளோம். பணியில் இருக்கும் மேஸ்திரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான், எங்கள் கட்டுமானப் பணி தனித்துவமாக இருக்கிறது” என்கிறார்.

Next Story