இந்திய குடியரசு தினம்


இந்திய குடியரசு தினம்
x
தினத்தந்தி 25 Jan 2022 4:28 PM GMT (Updated: 25 Jan 2022 4:28 PM GMT)

இந்திய அரசியலமைப்புச் சட்டம், செயலாக்கத்திற்கு வந்த தினத்தையே நாம், ‘குடியரசு தினம்’ என்ற பெயரில் கடைப்பிடித்து வருகிறோம்.

1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நள்ளிரவில், நமது இந்திய திருநாட்டிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அந்த சுதந்திரம் முழுமையானது அல்ல.

ஏனெனில், நாம் சுதந்திரம் பெற்றபோதும் பிரிட்டிஷ் அரசு, இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதாவது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும். தனிச்சையாக இந்தியாவால் எந்த முடிவும் எடுக்க முடியாது. இதனைக் கண்காணிப்பதற்காக, பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட கவர்னல் ஜெனரல்தான், அப்போது இந்திய நாட்டின் தலைவராக இருந்தார்.

இதையடுத்து இந்தியாவிற்கென நிரந்தர அரசியலமைப்பை உருவாக்க, 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி ஒரு வரைவுக்குழு ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். இந்த வரைவுக்குழு ஏற்படுத்திய இந்திய அரசியலமைப்பு சட்டம், 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர் 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி, 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்தானது. இந்த அரசியலமைப்பு சட்டமானது, அடுத்த இரண்டு நாட்களில், அதாவது 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. அதுதான் இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.


Next Story