64 வயது லாரி டிரைவரின் கால்பந்து ஆர்வம்


64 வயது லாரி டிரைவரின் கால்பந்து ஆர்வம்
x

64 வயதாகும் ஜேம்ஸும் அந்த ரகம் தான். லாரி டிரைவராக பணி புரியும் இவர் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர். சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்.

மனதுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு வயது தடையில்லை. வயது என்பது வெறும் எண்ணைத்தவிர வேறு எதுமில்லை என்பதை பலரும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். குடும்ப சூழ்நிலையால் டிரைவர் பணியை மேற்கொண்டாலும் கால்பந்து விளையாடுவதற்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் பயன்படுத்த தவறியதில்லை. அதன் பலனாக வயநாடு கால்பந்து அணியில் அங்கம் வகித்திருக்கிறார். வாலிப வயதில் கால்பந்தில் கோலாச்சியவர், வயது அதிகரித்த பிறகும் கால்பந்து மீதான மோகத்தை குறைத்துக்கொள்ளவில்லை. இப்போதும் ஓட்டுநர் பணிக்கு இடையே கால்பந்து பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறார். முதுமை வெளிப்படாத அளவிற்கு அதிரடியாக பந்தை கடத்தி சென்று உற்சாகமாக விளையாடு கிறார்.

ஜேம்ஸ் கால்பந்து விளையாடி பயிற்சி பெறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. அவர் பந்தை தோள்பட்டையிலும், தலையிலும் தாங்கியபடி அங்கும் இங்கும் நகர்த்தி பயிற்சி பெறுவதை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அவரை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பகிர்ந்த பிரதீப் ரமேஷ், "இப்போதும் கால்பந்து விளையாடும் இந்த 64 வயதானவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் வாழ்வாதாரத்துக்காக லாரி ஓட்டுகிறார். கால்பந்து கிட்டையும் தனது லாரியில் உடன் எடுத்துச் செல்கிறார். வயநாடு கால்பந்து அணியின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறார். அந்த தொடர்பை விட்டுவிடாமல் இன்றும் கால்பந்து விளையாடி பொழுதை போக்குகிறார். அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால், நீங்கள் ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அது உங்களுக்கு விருப்பமானதா? அதை உடனே செய்துவிடுங்கள். அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள். அது உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும். ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு போய்விடுவோம். எனவே நினைவில் கொள்ளும்படியான வாழ்க்கையை வாழுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த இன்ஸ்டாகிராம் பதிவை 3.4 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ''திறமைக்கு வயது இல்லை'' என்று பலரும் பாராட்டியுள்ளனர். ''விளையாட்டே எனது உண்மையான ஆர்வமாக இருப்பதால், கால்பந்து விளையாடுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருப்பதாக'' ஜேம்ஸ் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Next Story