சிறுமி ஸ்மிருதி ஹெக்டேக்கு கிடைத்த தொலைதொடர்பு அங்கீகாரம்


சிறுமி ஸ்மிருதி ஹெக்டேக்கு கிடைத்த தொலைதொடர்பு அங்கீகாரம்
x

பெற்றோர் அனுமதித்தால் பேரிடர் காலங்களில் மக்களுக்கு அமெச்சூர் வானொலி வழியே உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார் சிறுமி ஸ்மிருதி ஹெக்டே.

வணிக நோக்கமின்றி தனி நபர்களால் நடத்தப்படும் வானொலிக்கு அமெச்சூர் வானொலி அல்லது ஹாம் வானொலி என்று பெயர். இயற்கை பேரிடர் காலங்களில் தொலைபேசி, செல்போன் மற்றும் இணையம் போன்றவை இயங்காவிட்டாலும், அமெச்சூர் வானொலி இயங்கும் ஆற்றல் கொண்டது. பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அமெச்சூர் வானொலி உற்ற தோழனாக விளங்கும்.

இத்தகைய தனித்துவம் கொண்ட அமெச்சூர் வானொலி நிலையம் நடத்துவதற்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 13 வயது சிறுமி ஸ்மிருதி ஹெக்டேவுக்கு தொலைத்தொடர்புத்துறை உரிமம் வழங்கியுள்ளது. இதன் மூலம் அமெச்சூர் வானொலி அமைக்க உரிமம் பெற்ற முதல் சிறுமி என்ற சிறப்பையும் ஸ்மிருதி பெற்றுள்ளார்.

"கிரிக்கெட் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அமெச்சூர் வானொலி அமைக்க எனக்கு உரிமம் வழங்கப்பட்ட செய்தி கிடைத்தது. வானுக்கும், பூமிக்கும் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. காருக்குள் இருந்ததால் அதைச் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

இப்போது 8-ம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்த 2018-ம் ஆண்டு அமெச்சூர் வானொலி இயக்குவதற்கான பயிற்சி அளிக்கும் தேசிய மையத்தில் சேர்ந்து படித்தேன். என் தந்தைக்குத்தான் அமெச்சூர் வானொலி தொடங்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

அவரோடு இந்த கல்வி நிறுவனத்துக்குச் சென்றபோது, நாமும் வானொலி நிலையத்தை இயக்க கற்றுக்கொள்ளலாம் என்று தோன்றியது. அமெச்சூர் வானொலி எனக்கு பிடித்துப் போனது. இங்கு சேர்ந்து வார இறுதி நாளில் நடக்கும் வகுப்பில் கலந்துகொண்டு அமெச்சூர் வானொலி இயக்குவதையும், உச்சரிப்பையும் கற்றுக் கொண்டோம்.

இந்த உரிமம் கிடைப்பதற்கு முன்பு, அமெச்சூர் ரேடியோ சொசைட்டி நடத்தும் தேர்வு எழுதி, அமெச்சூர் ஸ்டேஷன் ஆபரேட்டர் சான்றிதழைப் பெற்றேன். இந்தத் தேர்வில் 2 பிரிவுகள் இருக்கும். முதல் பிரிவு எலெக்ட்ரானிக்ஸ் அடிப்படையிலானது. இரண்டாவது பிரிவு, வானொலியை இயக்குவதற்கான விதிமுறைகளை உள்ளடக்கியது.

பல பதில்கள் கொடுத்து கேள்வி கேட்கப்படும் முறையில், ஒவ்வொரு பிரிவும் 50 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். தேர்வு முடிவில் நமது மதிப்பெண்ணை வெளியிடமாட்டார்கள். தேர்ச்சி பெற்றதை மட்டுமே அறிவிப்பார்கள். அதன்பிறகு அமெச்சூர் வானொலி அமைப்பதற்கான உரிமத்தைப் பெற, தொலைத்தொடர்புத்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு விஷயத்தில் பெரிய ஜாம்பவானாக இருந்தாலும், கற்றல் என்பது தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் என்று நம்புகிறேன். ஆன்லைன் மூலம் மோர்ஸ் கோடு எனப்படும் ரகசிய சமிக்ஞைகள் குறித்தும் கற்று வருகிறேன்.

காலை 6.45 மணிக்கு என் பணிகள் தொடங்கிவிடுகின்றன. பிற்பகல் 12.30 வரை ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறேன். அதன்பிறகு ரகசிய சமிக்ஞைகள் குறித்து படிக்கிறேன். மதிய உணவுக்குப் பிறகு, கர்நாடகா கிரிக்கெட் இன்ஸ்டிடியூட்டுக்கு கிரிக்கெட் பயிற்சிக்கு செல்கிறேன். தினமும் அங்கு 2 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறேன். 10 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். அப்போது நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடினேன்.

ரகசிய சமிக்ஞையைப் படித்து முடித்தபின்பு, என் பெற்றோர் அனுமதித்தால் பேரிடர் காலங்களில் மக்களுக்கு அமெச்சூர் வானொலி வழியே உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.


Next Story