மே மாதத்தில் உச்சம் தொட்ட வளிமண்டல கரியமில வாயு அளவு.. 40 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.!


மே மாதத்தில் உச்சம் தொட்ட வளிமண்டல கரியமில வாயு அளவு.. 40 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.!
x
தினத்தந்தி 4 Jun 2022 7:00 AM GMT (Updated: 4 Jun 2022 7:03 AM GMT)

மே மாதத்தில் வளிமண்டல கரியமில வாயு அளவு 50 சதவீதம் அதிகமாக உள்ளது என்று காலநிலை குறித்த ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

வாஷிங்டன்,

தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், நடப்பாண்டின் மே மாதத்தில் வளிமண்டல கார்பன்-டை-ஆக்ஸைட் வாயு அளவு 50 சதவீதம் அதிகமாக உள்ளது என்று அமெரிக்காவை மையமாக கொண்ட காலநிலை குறித்த ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

வளிமண்டலத்தில் இருக்க வேண்டிய கரியமில வாயுவின் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, மே 2022 இல், ஒரு மில்லியனுக்கு 420(பிபிஎம்) பாகங்கள் என்ற எல்லையைத் தாண்டி உள்ளது. ஒரு மில்லியனுக்கு பாகங்கள் (பிபிஎம்) என்பது வளிமண்டலத்தில் உள்ள மாசுபாட்டை அளவிட பயன்படும் அளவீட்டு அலகு ஆகும்.

ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் தான் கரியமில வாயு வெளியேற்றம் உச்சத்தை தொடும். அதன்படி, மே 2021இல், 419(பிபிஎம்) என்ற விகிதத்திலும், மே 2020இல் 417(பிபிஎம்) என்ற விகிதத்திலும் கரியமில வாயுசின் அளவு வளிமண்டலத்தில் உச்சத்தை தொட்டு வருகிறது.

தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், வளிமண்டலத்தில் கரியமில வாயு அளவு சுமார் 280 பிபிஎம் என்று நிலையாக இருந்து வந்தது. சுமார் 6000 ஆண்டுகள், இதே நிலையில் தான் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயு வெளியேற்றம் இருந்து வந்தது.

ஆனால், அந்த காலகட்டத்தை ஒப்பிடுகையில், தற்போதய நவீன உலகில், வளிமண்டல கார்பன்-டை-ஆக்ஸைட் வாயு 50 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த 40 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவாக இப்போது அதிகரித்துள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்ட காலநிலை குறித்த ஆய்வு நிறுவனமான, 'தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (என்.ஓ.ஏ.ஏ)' தெரிவித்துள்ளதாவது, மனிதர்களால் ஏற்படும் புவி வெப்பமடைதல் நிகழ்வே இதற்கு காரணமாகும் எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அதீத வெப்ப அலைகள், காட்டுத்தீ, பஞ்சம் போன்றவை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இது குறித்த தகவல் நமக்கு தெரிந்திருந்தும், இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாதது ஏன்? என்று குளோபல் மானிட்டரிங் ஆய்வகத்தின் விஞ்ஞானி பீட்டர் டான்ஸ் கேட்டுள்ளார்.


Next Story