அனைத்து வித புற்றுநோய்க்கும் மருந்து வந்துவிட்டதாக கருத வேண்டாம் - மருத்துவ நிபுணர் விளக்கம்


அனைத்து வித புற்றுநோய்க்கும் மருந்து வந்துவிட்டதாக கருத வேண்டாம் - மருத்துவ நிபுணர் விளக்கம்
x

எல்லா புற்றுநோய்களுக்கும் நாம் மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று முன்கூட்டியே முடிவு செய்யாதீர்கள்.

புதுடெல்லி,

மருத்துவ வரலாற்றிலேயே புற்றுநோய் நூறு சதவீதம் முழுமையாக முதன்முறையாக நீக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்கில் நியூயார்க்கில் உள்ள ஒரு புற்றுநோய் மையத்தில் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளுக்கு சோதனை முயற்சியாக 'டோஸ்டர்லிமாப்' என்ற மருந்து தரப்பட்டது. மனித உடலில் மாற்று ஆன்டிபாடிகளாக செயல்படும் இந்த மருந்து 3 வாரங்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் 6 மாதங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.

இதன் முடிவில் புற்றுநோய் முற்றிலுமாக குணமானது தெரிய வந்திருக்கிறது. இதனை என்டோஸ்கோபி, எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து, குருகிராமில் செயல்பட்டு வரும் பராஸ் மருத்துவமனை புற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர்(கர்னல்) ஆர். ரங்கா ராவ் பேசுகையில்,

புற்றுநோயின் அனைத்து நிலைகளுக்கும், கீமோதெரபி அல்லது அறுவை சிகிச்சை தேவையில்லை, எல்லா புற்றுநோய்களுக்கும் நாம் மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று முன்கூட்டியே முடிவு செய்யாதீர்கள்.

மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரில் மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய சோதனை, குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், இது மிகவும் ஊக்கமளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

ஆனால் இதன் உண்மையான தாக்கத்தை புரிந்து கொள்ள நீண்ட கால ஆய்வுகள் தேவை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.இந்த மருந்து இன்னும் ஆய்வு நிலையில் தான் உள்ளது.நோயெதிர்ப்பு சிகிச்சை அனைத்து வகையான புற்றுநோய் துறையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேபோல, உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் இயக்குனர் டாக்டர் சுச்சின் பஜாஜ் கூறுகையில், "இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப சிகிச்சையை மாற்றியமைப்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இதனால் மிகவும் பின்தங்கிய சமூகங்கள் கூட இந்த சிகிச்சையிலிருந்து பயனடையலாம்" என்று கூறினார்.

மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து பரிசோதனைகள் நடத்திய பின்னரே 'டோஸ்டர்லிமாப்' மருந்துகள் பொதுவெளிக்கு வரும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story