தியாகங்களை நினைவு கூரும் போர் நினைவுச் சின்னங்கள்


தியாகங்களை நினைவு கூரும் போர் நினைவுச் சின்னங்கள்
x

போரின் போது உயிர் நீத்தவர்களின் தியாகங்களை போற்றும் வகையில் போர் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றுள் வரலாற்று பக்கங்களில் தவிர்க்க முடியாத ஐந்து போர் நினைவுச் சின்னங்களின் தொகுப்பு இது.

சுதந்திரம், அமைதி, அரசியல் பிரச்சினைகளுக்காக உலகெங்கிலும் கடந்த காலங்களில் பல போர்கள் நடந்துள்ளன. அவை வரலாற்றின் பக்கங்களில் தங்க வார்த்தைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

மரைன் கார்ப்ஸ் வார் மெமோரியல், வெர்ஜீனியா:

இந்த நினைவகம் அமெரிக்காவின் வெர்ஜீனியா நகரில் அமைந்துள்ளது. 1775-ம் ஆண்டு போரில் இறந்த அமெரிக்க மரைன் கார்ப்ஸ் உறுப்பினர்களின் நினைவாக இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. நினைவுச்சின்னத்தின் மையப்பகுதியில் 1945-ல் சூரிபாச்சி மலையின் மீது அமெரிக்கக் கொடியை பறக்கவிட்ட ஆறு கடற்படை வீரர்களை சித்தரிக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நினைவுச்சின்னங்கள் வெர்ஜீனியா மற்றும் தென் கரோலினாவில் உள்ள மரைன் கார்ப்ஸ் தளங்களிலும் அமைந்துள்ளன.

பங்கர் ஹில் மெமோரியல், பாஸ்டன்:

221 அடி உயரமுள்ள இந்த கிரானைட் தூபி, அமெரிக்காவில் உள்ள பாஸ்டனின் சுதந்திர போராட்ட பாதையை நினைவுகூரும் சின்னமாக அமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் தொடங்கப்பட்ட புரட்சி முதல் ஒவ்வொரு காலகட்டங்களிலும் நடைபெற்ற போர்கள் வரை அத்தனையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. போர்களின் போது பெரும்பாலான சண்டைகள் ப்ரீட்ஸ் மலை பகுதியில்தான் நடந்துள்ளன. அதனால் அந்த பகுதியிலேயே இந்த நினைவு சின்னம் எழுப்பப்பட் டிருக்கிறது.

கொரியப் போர் நினைவுச்சின்னம், வாஷிங்டன்

இது கொரியப் போர் வீரர்களின் நினைவுச்சின்னம் என்றும் அழைக்கப்படுகிறது, 1950 முதல் 1953 வரை நடந்த கொரியப் போரின்போது இறந்த 6 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க வீரர்களை கவுரவிப்பதற்காக 1995-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கொரிய போரை சித்தரிக்கும் வகையில் போர் வீரர்கள் அணி வகுத்து நிற்பது போலவும், ரோந்து செல்வது போலவும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முக்கோணம் மற்றும் வட்ட வடிவில் இந்த நினைவு சின்னம் எழுப்பட்டுள்ளது. வட்ட வடிவத்துக்குள் முக்கோணத்தின் முனைப்பகுதி நுழைவது போலவும், அதை நோக்கி போர் வீரர்கள் அணிவகுத்து செல்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19 அமெரிக்க வீரர்களின் சிலைகள் உள்ளன.

9/11 மெமோரியல், நியூயார்க்:

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஏராளமான அப்பாவி மக்களுக்கு இந்த நினைவுச்சின்னம் அர்ப்பணிக்கப்பட்டது.

இரட்டைக் கோபுரங்கள் இருந்த இடத்தில் அதனை நினைவு கூரும் வகையில் இரண்டு குளங்கள் அமைந்துள்ளன. இந்த குளங்களை சூழ்ந்து எழுப்பப்பட்ட சுவர்களில் 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல்கள் மற்றும் 1993-ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்பு ஆகிய இரண்டிலும் கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் வரிசையாக பொறிக்கப்பட்டுள்ளன.

இந்தியா கேட், புதுடெல்லி:

இந்தியாவின் பிரபலமான நினைவுச்சின்னங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. தலை நகர் டெல்லியில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் அமைந்திருக்கிறது. முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்துக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த 70 ஆயிரம் இந்திய வீரர்களின் நினைவாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது.


Next Story