நாப்கினில் மறுசுழற்சி - டாரியா


நாப்கினில்  மறுசுழற்சி - டாரியா
x

நாப்கினில் உள்ள செல்லுலோஸையும், பிளாஸ்டிக்கையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்து அவற்றை மறுசுழற்சி செய்வதுதான் டாரியா முன்வைத்த யோசனையாகும்..

சமூகத்தில் பெண்கள் மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசுவது கிடையாது. இப்போதுதான் இந்தியாவில் பெண்களின் மாதவிடாய் உடல் நலம் பற்றிய கரிசனம் தோன்றியிருக்கிறது. பழமையில் ஊறிய சமூகம் இன்றும் இயல்பானவற்றை அப்படியே எடுத்துக்கொள்ள தயாராக இல்லை.

தற்போதுதான் இந்தியாவின் 30 சதவீத பெண்கள் சுகாதாரமான நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் இன்னமும் நோய்த் தொற்றுக்கு வாய்ப்பளிக்கும் பழைய முறைகளையே பின்பற்றுகிறார்கள். ஆனால், இந்த 30 சதவீதம் என்பது எண்ணிக்கையின்படி பார்த்தால் 350 மில்லியன் பெண்கள் என்றாகிறது. இதனால் உருவாகும் நாப்கின் குப்பை பெரிய பிரச்சினையாகி விடுகிறது.

பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை யாருக்கும் தெரியாமல் கழிப்பறை குழிகளுக்குள் தள்ளிவிடுவதும் நடக்கிறது. நாப்கின்கள் பருத்தியால் ஆனவை என்று சொல்லப்பட்டாலும் அதில் பிளாஸ்டிக்கும், செல்லுலோஸ் என்ற வேதிப்பொருளும் நிரம்பி உள்ளன.

பிளாஸ்டிக் பெண்களின் உடல் நலத்துக்கு ஆபத்து என்பது மட்டுமல்ல, பூமியின் நலனுக்கும் ஆபத்தானது. குப்பைகளோடு சேர்ந்து பயணிக்கும் நாப்கின் மட்கி அழிவதற்கு, அதில் உள்ள பிளாஸ்டிக் காரணமாக, 800 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதற்கிடையில், பூமியை வெப்பமடைய வைக்கும் நச்சு வாயுக்களையும் நாப்கின் வெளியிடும்.

இப்பிரச்சினைக்கு டாரியா என்ற மெக்கானிக்கல் என்ஜினீயர் தீர்வு கண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த இந்த இளைஞர் சானிடரி நாப்கினை பாதுகாப்பாக அகற்றுவதற்கான முறை குறித்து ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதினார். பயோடெக்னாலஜி தொழில் ஆய்வு உதவி அமைப்பு 2018-ல் தேர்ந்தெடுத்த முதல் பத்து ஆய்வுக் கட்டு ரைகளில் இவரது ஆய்வு கட்டுரையும் ஒன்றாகப் பாராட்டப்பட்டது.

நாப்கினில் உள்ள செல்லுலோஸையும், பிளாஸ்டிக்கையும் தனித்தனியாகப் பிரித்து எடுத்து அவற்றை மறுசுழற்சி செய்வதுதான் டாரியா முன்வைத்த யோசனையாகும். முதலில், வீடுகளில் பயன்படுத்துவதற்கான கருவி ஒன்றை அவர் உருவாக்கினார். ஆனால், பிரச்சினையின் தீவிரம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், தொழிலகங்களில் பயன்படுத்துவதற்கான கருவியை முதலில் உருவாக்கினார்.

"தொழிலகங்களுக்கும், ஆலைகளுக்கும் நாங்கள் சின்ன கழிவு பெட்டி ஒன்றைக் கொடுப்போம். அதில் 30 நாப்கின்கள் வரை போட முடியும். அந்தப் பெட்டியைப் பதனம் செய்வதற்கு எடுத்துச் செல்வார்கள். அங்கே நாப்கின்கள் சிதைக்கப்பட்டு, தொற்றை அகற்றும். பின்னர், செல்லுலோஸ், பிளாஸ்டிக் பிரித்து எடுக்கப்பட்டு அவற்றை பயன்படுத்தும் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" என செயல்முறையை விளக்குகிறார் டாரியா.

இதற்காக `பேட்கேர் லேப்' என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். தற்போது, பெரிய நிறுவனங்களுக்கான நாப்கின் கழிவு பெட்டிகள் தயாரிக்கப்பட்டு நாப்கின்களை சேகரித்து, மறுசுழற்சி செய்யும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. விரைவில், வீடுகளுக்கான நாப்கின் கழிவு பெட்டியும் சேகரிப்பு முறையில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.


Next Story