ஐ.டி.பெண்ணின், ஆர்கானிக் காதல்..!


ஐ.டி.பெண்ணின், ஆர்கானிக் காதல்..!
x

பன்னாட்டு நிறுவன வேலையை உதறிவிட்டு பல ஆண்டுகளாக தரிசாக கிடந்த மூதாதையர் நிலத்தில் இயற்கை விவசாயத்தை பின்பற்றி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார், ரோஜா ரெட்டி.

படிப்பை முடித்ததும் நகர்புறத்தில் வேலை பார்ப்பதுதான் பெரும்பாலான கிராமப்புற இளம் தலைமுறையினரின் கனவாக இருக்கிறது.

ஆனால் ரோஜா ரெட்டிக்கு அதில் உடன்பாடு இல்லை. அவருக்கு விவசாயம் மீதுதான் தீராத காதல் குடிகொண்டிருந்தது. படிப்புக்கு நடுவிலும் தனது குடும்பத்தினர் மேற்கொண்டு வந்த விவசாய பணிகளை ஆர்வமுடன் கவனித்து வந்தார்.

விவசாயியாக வேண்டும் என்று கனவும் கண்டார். ஆனால் பரம்பரையாக விவசாயம் செய்து வந்த அவரது குடும்பம், மண்ணில் உழைப்பதைவிட ரோஜா ரெட்டி நல்ல சம்பளத்தில் வேலையில் அமர வேண்டும் என விரும்பியது.

கர்நாடகாவின் டோனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவரான ரோஜா ரெட்டி குடும்பத்தின் விருப்பத்திற்காக படிப்பை முடித்ததும் பெங்களூ ருவில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். கொரோனா காலத்தில் வீடு திரும்ப வேண்டியிருந்தது. பணிக்கு நடுவே இயற்கை விவசாயத்தின் பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார்.

"என் தந்தையும் சகோதரனும் முழுநேர விவசாயிகள். ஆனால், விவசாயத்தில் போதிய வருமானம் இல்லை. அதிக நஷ்டத்தை சந்தித்தார்கள். அதனால் விவசாயத்தை கைவிடும் நிலையில் இருந்தார்கள். நானோ விவசாயத்தில் மாற்றுமுறை யுக்திகளை பின்பற்றுமாறு வலியுறுத்தினேன். அதனை பரிசோதித்து பார்க்க ஆர்வம் காட்டினேன்.

நான் விவசாயம் செய்வதை அவர்கள் விரும்பவில்லை. அதனை கருத்தில் கொள்ளாமல் இயற்கை விவசாய முறையை கையில் எடுத்தேன். எங்கள் குடும்ப பண்ணையை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுப்பதை சவாலாக எடுத்துக்கொண்டேன். என் அலுவலக பணி நேரத்திற்குப் பிறகு மாலையில் நிலத்தில் வேலை செய்தேன்" என்று நினைவுகூரும் ரோஜா, ஒரு கட்டத்திற்கு பிறகு தன் கார்ப்பரேட் வேலையை விட்டு விட்டார்.

இன்று முழுநேர விவசாயியாகிவிட்டார். ஐம்பது ஏக்கர் பரப்பளவில் இயற்கை காய்கறிகளை பயிரிடுகிறார். இப்போது ரோஜா, விளைச்சலின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடி வருவாய் ஈட்டுகிறார்.

2020-ம் ஆண்டில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டபோது, குடும்பத்தினர் அவரது முடிவை எதிர்த்தனர்.

அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலை கைவசம் இருக்கும்போது ஏன் விவசாயம் செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்களும், கிராம மக்களும் கேள்வி எழுப்பினர்.

"செயற்கை விவசாயம் மட்டுமே சிறந்த விளைச்சலைத் தரும் என்று கிராம மக்கள் நம்பினர். அது உண்மையில் நேர்மாறானது. என் தாத்தா காலத்தில் இருந்து ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் மண்ணின் தரம் குறைந்துவிட்டது" என்று ரோஜா விளக்குகிறார். தன் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்றார் ரோஜா.

"நான் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றேன். முதலில் சித்ரதுர்காவில் இருந்து எட்டு இயற்கை விவசாயிகளைக் கொண்ட குழுவை உருவாக்கினேன்.

ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ளூர் அதிகாரிகளிடம் பேசி, எங்கள் விளைபொருட்களுக்கு சந்தை அமைக்க சிறிது இடம் கேட்டோம். ஆர்கானிக் காய்கறிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வீடுகளுக்குச் சென்று, மக்களை எங்கள் சந்தைக்கு அழைத்தோம்" என்று விரிவாகப் பேசுகிறார்.

கர்நாடகா முழுவதும் இயற்கை விவசாயிகளின் வலைப்பின்னலை உருவாக்கியுள்ளார் ரோஜா. அதில், சுமார் 500 விவசாயிகள் உள்ளனர். ஓராண்டாக மாநிலம் முழுவதும் ஆர்கானிக் சந்தைகளை அமைத்துவருகிறார். இதற்காக நிறுவனம் ஒன்றையும் நிர்வகிக்கிறார்.

கர்நாடகா முழுவதும் இயற்கை விவசாயிகளின் வலைப்பின்னலை உருவாக்கியுள்ளார் ரோஜா. அதில், சுமார் 500 விவசாயிகள் உள்ளனர். ஓராண்டாக மாநிலம் முழுவதும் ஆர்கானிக் சந்தைகளை அமைத்துவருகிறார்.


Next Story