சுற்றுச்சூழலை பாதுகாப்போம்


சுற்றுச்சூழலை பாதுகாப்போம்
x

புதியதோர் உலகு படைக்க உந்து சக்தியாக இருப்பது இயற்கை படைத்த உலகையும், சுற்றுப்புறச்சூழலையும் தூய்மையுடன் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

பசுமையான வயல்வெளியும், வனப்பு மிக்க சோலைகளாய் காட்சி அளித்து கொண்டிருந்த நிலங்கள் காலிமனைகளாக மாறி வருகின்றன. குளங்கள், கண்மாய்களின் பரப்பளவு ஆக்கிரமிப்பால் சுருங்கி காட்சி அளிக்கின்றன. நன்செய், புன்செய் பயிர்களை விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு விளைநிலங்கள் வீடுகளாக மாறி விட்டன. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறி நச்சுக்களால் சூழப்பெற்ற காலக்கட்டத்தில் இருக்கிறோம். இந்நிலை மாற எல்லோரிடமும் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந்தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது கடமை.

நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வாழும் நிலம், அருந்தும் நீர் ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற அக்கறை எல்லோருக்கும் உண்டு. நமது முன்னோர்கள் திடகாத்திரமாக வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு அடிப்படை காரணம் அவர்களுடைய வாழ்க்கை இயற்கையோடு இணைந்ததாக இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் சுற்றுப்புற சூழலில் அடர்ந்த பசுமையான காடுகளும், செடி, கொடிகளும், புல்வெளிகளும், வனவிலங்குகளும் நிறைந்து செழிப்பான சீரான மழை வளத்தையும் நிறைந்த சீதோஷ்ண நிலையையும் பெற்று வந்தோம். ஆனால் காலப்போக்கில் நிலைமை மாறியது.

மக்கள் தொகை அதிகரிப்பால் நம் நாட்டில் சுற்றுப்புற சூழலுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் இயற்கை செல்வங்கள் அழிக்கப்படுகின்றன. பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் வனப்பகுதி அழிக்கப்படுகிறது. இதனால் இயற்கை சூழல் கெடுவதோடு மழையும் குறைந்து வளமான நிலங்கள் வறண்ட பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருட்களும், கழிவு நீரும் ஆறுகள், நீர்நிலைகளில் கலப்பதால் நீர் மாசு ஏற்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் காற்று மாசுபடுகிறது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதால் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் பூமி வெப்பமடைதல் ஆகும். வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளில் கடலில் உள்ள பவளப்பாறைகள் அழிய நேரிடும். வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக துருவ பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் கடலின் நீர்மட்டம் உயரும் நிலை உள்ளது.

பூமி வெப்பமடைவதை தடுக்க சாதாரண மக்களும் உதவ முடியும். நாம் வாழும் இடங்கள், அலுவலகங்கள் மற்றும் காலி நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து பசுமையான பூமியாக மாற்ற வேண்டும். இதற்கு மாணவர்களாகிய நீங்கள் ஒன்று சேர்ந்து களம் இறங்க வேண்டும். பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நிலம் மற்றும் நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கவேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும். நாட்டின் பரப்பில் குறைந்த பட்சம் 20 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும் என்பதால் மரங்களை வெட்டுவதை தவிர்க்கவேண்டும். சுற்றுப்புற சூழல் தூய்மையே நமது உடல், உள்ளம், ஆவி தூய்மை பெற உதவும். புதியதோர் உலகு படைக்க உந்து சக்தியாக இருப்பது இயற்கை படைத்த உலகையும், சுற்றுப்புறச்சூழலையும் தூய்மையுடன் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அதனை உணர்ந்து அனைவரும் செயல்படுவோம்.


Next Story