வெள்ளியை உருக்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி


வெள்ளியை உருக்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி
x
தினத்தந்தி 20 March 2023 7:45 PM GMT (Updated: 20 March 2023 7:46 PM GMT)
சேலம்

சேலத்தில் வெள்ளியை உருக்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வியாபாரிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். இந்த மோசடி புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் கமிஷனரிடம் புகார்

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட வெள்ளி வியாபாரிகள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 3 பேர் வெள்ளியை உருக்கி கம்பி செய்யும் தொழில் செய்து வந்தனர். இதனால் அவர்களிடம் நாங்கள் கிலோ கணக்கில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி கட்டியை கொடுத்தோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு வெள்ளியை உருக்கி கம்பிகளாக கொடுக்கவில்லை. இதனால் அவர்களிடம் வெள்ளி கட்டிகளை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

ரூ.1½ கோடி மோசடி

தொடர்ந்து அவர்களிடம் திரும்ப கேட்ட போது, திடீரென எங்களிடம் வெள்ளி கட்டிகள் வாங்கவில்லை என்று கூறி ஏமாற்றினர். விசாரித்த போது தான் அவர்கள் எங்களை போன்று பலரிடம் வெள்ளி கட்டிகள் வாங்கி ரூ.1½ கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.

இந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story