முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு புகைப்பட கண்காட்சியை 1 லட்சம் பேர் பார்வையிட்டனர்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு புகைப்பட கண்காட்சியை 1 லட்சம் பேர் பார்வையிட்டனர்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு புகைப்பட கண்காட்சியை 1 லட்சம் பேர் பார்வையிட்டனர்.

மதுரை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு புகைப்பட கண்காட்சியை 1 லட்சம் பேர் பார்வையிட்டனர்.

சிறப்பு கண்காட்சி

அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டின் பேரில், மதுரை கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட யாதவர் கல்லூரி அருகே உள்ள மேனேந்தல் மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி, கடந்த 19-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் நடிகர் வடிவேலு, கண்காட்சியை பார்வையிட்டு சென்றார்.

இந்த கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின், சிறுவயது முதல் பொது வாழ்க்கை, அரசியல் தளத்தில் எதிர்கொண்ட சவால்கள், இன்னல்கள் குறித்து இன்றைய தலைமுறையினர் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக சிறுவயதில் ஆண் பிள்ளைகள் விளையாட்டுப் போட்டிகளிலும், கொண்டாட்ட நிகழ்வுகளிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 14-வது வயதில் கட்சிக்காக பிரசாரம் செய்ய தொடங்கி, 15-வது வயதில் தி.மு.க இளைஞரணி என்ற அமைப்பை உருவாக்கி, 20-வது வயதில் பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தார். 36-வது வயதில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தனது 43-வது வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையுடன் சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பு ஏற்று சிங்காரச் சென்னை என்று அனைவரும் அழைக்கும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்தினார்.

செல்பி

இந்தி எதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்சி காலத்தில் மிஷா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல போராட்டங்களையும், இன்னல்களையும் கடந்து வந்துள்ளார். அவரது நீண்ட பொதுவாழ்க்கைக்கும், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களால் மக்கள் போற்றும் வகையில் இன்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த கண்காட்சியில் பல்வேறு அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புகைப்பட கண்காட்சியை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகளவில் ஆர்வமுடன் வந்து புகைப்பட கண்காட்சியை பார்க்கின்றனர். அவர்கள் முதல்-அமைச்சரின் புகைப்படத்துடன் நின்று செல்பி எடுத்து கொள்கின்றனர். இதுவரை சுமார் 1 லட்சம் பேர், இந்த புகைப்பட கண்காட்சியை கண்டு களித்துள்ளனர். நேற்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நடிகர்கள் சூரி, ஜோ.மல்லூரி ஆகியோர் கண்காட்சியை பார்த்தனர். அவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி, கண்காட்சி முழுவதும் அழைத்து சென்று சுற்றி காண்பித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story