1½ கிலோ வெள்ளி பொருட்கள்- ரூ.36 ஆயிரம் கொள்ளை
1½ கிலோ வெள்ளி பொருட்கள்- ரூ.36 ஆயிரம் கொள்ளை
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே அடகு கடையின் பூட்டை உடைத்து 1½ கிேலா வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் லாக்கரை உடைக்க முடியாததால் 50 பவுன் நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பின.
நகை அடகு கடை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோதிராம்(வயது35). இவர் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வலிவலம் கடைத்தெருவில் நகை கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு மோதிராம் வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை கடையை திறக்க மோதிராம் வந்தார். அப்போது கடையின் இரும்பு ஷட்டரில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தன.
1½ கிலோ வெள்ளி கொள்ளை
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மோதிராம் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையின் லாக்கரில் இருந்த 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் மற்றொரு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த 50 பவுன் நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பின. கொள்ளையர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க கடைகளில் இருந்த 3 கண்காணிப்பு கேமராக்களையும் திருடி சென்று விட்டனர்.
வலைவீச்சு
இது குறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து மோதிராம் கொடுத்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்
கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் கீழ்வேளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.