அரசு பள்ளிகளில் விரைவில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்


அரசு பள்ளிகளில் விரைவில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
x

அரசு பள்ளிகளில் விரைவில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ள அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

திருச்சி

ஆய்வுக்கூட்டம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வரவேற்றார். கூட்டத்தில், கல்வித்துறை மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும் வகையில் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.

மரத்தடியில் வகுப்புகள்

கூட்டத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முதன்மைக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள குறைகளை எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

கூட்ட முடிவில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்ட நிதி ரூ.1,300 கோடி வந்த உடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும். இதில், மரத்தடியில் வகுப்புகள் நடக்கும், 2,500 பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்த நபார்டு வங்கியில் இருந்து ரூ.1,650 கோடி நிதி பெற உள்ளோம்.

கல்வி தொலைக்காட்சி

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான ஒரு தளமாக விளங்கும் கல்வி தொலைக்காட்சிக்காக கூடுதலாக இன்னொரு சேனலும் தொடங்கப்பட உள்ளது. இதனால், அதனை நிர்வகிக்க ஒரு நபர் தேவை. இதற்காக 79 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் தகுதியின் அடிப்படையில் ஒருவரை, இதற்கென நியமிக்கப்பட்ட தனிக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர். அவரை பற்றி கடந்த 2 நாட்களாக பல்வேறு தகவல்கள், பின்புலம் குறித்து தெரிய வந்ததால், உடனடியாக அவரது நியமன ஆணையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டேன். அவரது பின்புலத்தை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

10 ஆயிரம் ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் தமிழ் வழி, ஆங்கில வழி என எந்த மீடியத்தை தேடி வருகிறார்களோ அதை கொடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் ஆசிரியர்களை விரைவில் நியமிக்க உள்ளோம்.

இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2,500 முதுகலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. மேலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்கப்பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story