கடலூரில் பகலில் 104.2 டிகிரி வெயில்


கடலூரில் பகலில் 104.2 டிகிரி வெயில்
x

கடலூரில் நேற்று பகலில் 104.2 டிகிரி வெயில் பதிவானது. இரவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதற்கிடையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நாளை (சனிக்கிழமை) முடிவடைகிறது. இருந்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சூரியன் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்றும் கடலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதாவது 104.2 டிகிரி வெயில் பதிவானது. இதை காலையிலேயே உணர முடிந்தது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்களும் வெளியில் செல்ல முடியாமலும், வீட்டில் இருக்க முடியாமலும் தவித்தனர். மின்விசிறியை சுழல விட்டால் அனல் காற்று தான் வீசியது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததை பார்க்க முடிந்தது.

மழை

மாலை நேரத்தில் சூரியன் மறைந்தாலும் அதன் வெப்பத்தை அதிக அளவில் உணர முடிந்தது. இரவு 7.30மணி அளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் பலத்த காற்றாக வீசியது. இதனால் சாலைகளில் உள்ள குப்பைகள் காற்றில் பறந்தன. இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டனர். சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.


Next Story