106-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை


106-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
x

எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

சென்னை,

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அலங்கரிக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்தார்.

இதில் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், சி.பொன்னையன், செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, பா.வளர்மதி, கோகுல இந்திரா, க.பாண்டியராஜன், பெஞ்சமின் உள்பட முன்னாள் அமைச்சர்கள், இலக்கிய அணி செயலாளர் வைகைசெல்வன், மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் எம்.ஏ.சேவியர், முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன், நடிகை விந்தியா உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உருவசிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கட்சி கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றினார். அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க... புரட்சித்தலைவி ஜெயலலிதா வாழ்க...' என வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி 106 கிலோ எடையிலான 'கேக்' வெட்டி அதனை தொண்டர்களுக்கு வழங்கினார். கட்சி பணிகளின்போது உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கினார். அதன்பின்னர் கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் கலைப்புனிதன் எழுதிய 'மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மாண்புகள்' என்ற புத்தகத்தை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஏழை, எளியவர்கள் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பணியாற்றுவோம்' என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்

இதேபோல் சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை தனது கணவர் டாக்டர் சவுந்தரராஜனுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதேபோல முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், பி.எச்.மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் ராமாவரம் தோட்டத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். குறித்த புத்தகங்கள் எழுதிய 17 பேருக்கு ஓ.பன்னீர்செல்வம் விருது வழங்கி கவுரவித்தார்.

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் எம்.ஜி.ஆர். நடிப்பில் தான் இசையமைத்த பாடல்களையும் அவர் பாடினார்.

சசிகலா

சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து திரண்டிருந்த தொண்டர்களுக்கு சசிகலா இனிப்புகள் வழங்கினார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

டி.டி.வி.தினகரன்

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன் உள்பட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.


Next Story