கொள்ளிடத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் 12,500 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்


கொள்ளிடத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் 12,500 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
x

தா.பழூர் டெல்டா பாசனத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் 12,500 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

சம்பா நெல் சாகுபடி

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிக்கு சொந்தமான 30-க்கும் அதிகமான குக்கிராமங்களில் சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒவ்வொரு ஆண்டும் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் விவசாயிகள் ஆர்வத்துடன் பாரம்பரிய நாற்றங்கால் முறையிலும், பாய் நாற்றங்கால் முறையிலும், நேரடி விதைப்பு முறையிலும் நெல் நடவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பாசனத்திற்கு தேவையான அளவு கொள்ளிடம் ஆற்றில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பொன்னார் பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் பொன்னாற்றின் தலைப்பு பகுதியான குருவாடி என்னும் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொரம்பு அமைத்து கொள்ளிடம் ஆற்றில் இருந்து பொன்னாற்றுக்கு தண்ணீர் திசை மாற்றி விடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதுபோலவே பாசனத்திற்கான தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதற்கிடையில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மேட்டூரில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டதால் மூன்று முறை கொள்ளிடம் ஆறு இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியது.

விவசாயிகள் வேதனை

இதனால் பொன்னாற்றின் தலைப்பு பகுதியில் மண் மேடு ஏற்பட்டு பொன்னாற்றில் தண்ணீர் திறப்பது சிக்கல் ஏற்பட்டது. தினத்தந்தியில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைப்புப் பகுதியில் ஏற்பட்டிருந்த மண் மேட்டினை அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். பின்னர் தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு தண்ணீர் பொன்னாற்றில் வினியோகம் செய்யப்பட்டது. அதன் பிறகு பொன்னாற்றுக்கு பாசனத்துக்கு தண்ணீர் தரும் அளவுக்கு ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் மீண்டும் பாசன வாய்க்கால் வறண்டு போனது. இதனால் நடவு செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இளம் நாற்றுகள் கருகி வீணாகி கொண்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் நேரடி நெல் விதைப்பு முறையில் நெல் விதைப்பு செய்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து கோடாலி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு மேட்டூரில் இருந்து மூன்று முறை அதிக அளவு வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது. மேலணையில் இருந்தும் கல்லணையில் இருந்தும் கீழணை வழியாக ஏராளமான தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பொன்னாற்று பாசன விவசாயிகளுக்காகவும், இதர விவசாயிகளுக்காகவும் பயன்படுத்தும் வகையில் மேலணை, கல்லணை மற்றும் கீழணைகளில் சேகரித்து வைக்காமல் தண்ணீரை அரசு வீணடித்துள்ளது.

கிடப்பில் போடப்பட்ட திட்டம்

இதனால் இப்போது பொன்னாற்று பாசன விவசாயிகள் பாசனத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்போது மேட்டூரில் இருந்து தண்ணீர் எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.

சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அருள்:- கடந்த 2019-ம் ஆண்டு பொன்னாற்று தலைப்பு பகுதி அமைந்துள்ள குருவாடிக்கு அருகில் வைப்பூர் வாழ்க்கை இடையே கதவனை அமைப்பதற்கு ரூ.300 கோடி செலவில் திட்டம் இயற்றப்பட்டு அதற்கு அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கதவணை அமைக்கப்பட்டால் அதற்கு முன்பு உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றில் தண்ணீர் சேமித்து வைக்கப்படும். இதன் மூலமாக இப்பகுதியில் கொரம்பு அமைக்காமலே பொன்னாற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே தற்போதுள்ள அரசு வைப்பூர் வாழ்க்கை இடையிலான கதவணையை அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து பொன்னாற்றின் தலைப்பு பகுதியை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மருதையாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர் ஜெயங்கொண்டம் சித்தார்த்தன், மதனத்தூர் உதவி பொறியாளர் மோகன்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

விவசாயிகள் தவிப்பு

பின்னர் போர்க்கால அடிப்படையில் ஆற்றின் பாதையை திருப்பி பொன்னாற்றுக்கு தண்ணீர் திருப்பிவிடும் வகையில் அமைப்பதற்கான பணியை பொக்லைன் எந்திரம் மூலம் துவக்கி 3 அல்லது 4 நாட்களில் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் வகையில் தயார்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். மேலும் நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகனிடம் நேரடியாக பொன்னாற்றுப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பொன்னாற்று பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

தற்போது உள்ள நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பொன்னாற்றுக்கு தண்ணீர் திறப்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து முடித்து மேட்டூரில் இருந்து தண்ணீர் பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு குறைந்தது ஒரு வார காலம் ஆகும் என தெரிகிறது. அதுவரை பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் என்ன செய்வது என்று தவித்து வருகின்றனர்.


Next Story