நாமக்கல் மாவட்டத்தில் 12,969 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் - அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்


நாமக்கல் மாவட்டத்தில் 12,969 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் - அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Aug 2022 12:58 PM GMT (Updated: 27 Aug 2022 2:34 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 12,969 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 12,969 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.59 கோடி மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பு பயின்ற 12,969 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. (மாணவர்களுக்கான மிதிவண்டியின் விலை ரூ.5,175 ஆகும். மாணவிகளுக்கான மிதிவண்டியின் விலை ரூ.4,992 ஆகும்.)

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி முன்னிலையில் 23.08.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 446 மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 294 மாணவ, மாணவிகளுக்கும், நாமகிரிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 207 மாணவ, மாணவிகளுக்கும் இராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 207 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 1,154 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதல் அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை என இரு துறைகளையும் இரண்டு கண்களாக முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனா காலத்தில் மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிப்படையக்கூடாது என இல்லம் தேடி கல்வி என்ற சிறந்த திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களின் வசிப்பிட பகுதிகளுக்கே சென்று கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்து உள்ளார். மேலும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனையை பெற இலவச உதவி எண் 14417 கொண்டு வந்துள்ளார். மாணவ, மாணவியர்கள் பள்ளிப்படிப்பை முடித்து தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கவும், உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்து கல்லூரிகளில் கற்பிக்கப்படும் அனைத்து விதமான படிப்புகளின் விவரத்தை அறிந்து கொள்ளும் வழிகாட்டியாக நான் முதல்வன் என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழில் கல்வி நிறுவனங்களில் பயில 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுடன் அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்காரணமாக அரசு பள்ளிகளில் பயில்வது வறுமையின் அடையாளம் என்ற நிலை மாறி தற்போது அரசு பள்ளிகளில் பயில்வது பெருமையின் அடையாளமாக உள்ளது.

மேலும் மாணவ மாணவியர்கள் இந்த மிதிவண்டிகளை நல்ல முறையில் உபயோகப்படுத்தி பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் வருகை புரிய வேண்டும். மாணவியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவரை போல் அரசு உயர் அலுவலர்களாக வரும் வகையில் கடுமையான முயற்சி மேற்கொண்டு பயில வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பெ.சுப்பிரமணியன், நாமக்கல் நகராட்சித்தலைவர் து.கலாநிதி, துணைத்தலைவர் செ.பூபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சகுந்தலா கருணாகரன், இராசிபுரம் நகராட்சித்தலைவர் கவிதாசங்கர், சேந்தமங்கலம் ஒன்றியக்கழு தலைவர் சி.மணிமலா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, அட்மா குழுத்தலைவர் அசோக்குமார், சேந்தமங்கலம் பேரூராட்சித்தலைவர் சித்ராதனபாலன் உள்பட உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள், தலைமையாசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



Next Story