போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணியிடை நீக்கம்
போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் போதை பொருள் இல்லை என்ற நிலை 282 போலீஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ளது. போதை பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் துறையை சேர்ந்த 18 போலீசார், அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் போதை பொருள் நடமாட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் திருட்டு போய் மீட்கப்பட்ட 1½ கிலோ தங்கம், 300 செல்போன்கள், 50 இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவலன் செயலி
தமிழ்நாடு போலீஸ் துறையில் முதன் முறையாக பணியிடங்கள் காலியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்து 34 ஆயிரம் காவலர்கள், 15 ஆயிரம் ஊர்காவல் படை வீரர்கள் உள்ளனர். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 10 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள். தற்போது 3,700 காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதைப் போன்று அதிகாரிகளை பொறுத்த வரையில் ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினோம்.
அதன்பிறகு 444 உதவி ஆய்வாளர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலி பெண்கள் மத்தியில் சரியாக போய் சேரவில்லை. இதனால் அதுதொடர்பாக தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.