வீடு புகுந்து திருடிய முன்னாள் தீயணைப்பு வீரர் உள்பட 2 பேர் கைது
வீடு புகுந்து திருடிய முன்னாள் தீயணைப்பு வீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று காலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் வாழவந்தான்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (வயது 34) என்பதும், மேலகல்கண்டார்கோட்டை சாமிநாதன்நகர் மருதமுத்து மகன் ராம்குமார் (41) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணிகண்டம் அருகே முள்ளிப்பட்டியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதில் ராம்குமார் திருச்சியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வந்ததும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதியப்பட்டதால் கடந்த ஜனவரி மாதம் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல மணிகண்டன் மீது துவாக்குடி போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 4 பவுன் உருக்கிய தங்க கட்டி மீட்கப்பட்டது. மேலும், டேப், ஒரு இரும்பு ராடு, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.