முதியவரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை


முதியவரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x

முதியவரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

முன்விரோதம்

அரியலூர் மாவட்டம், நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வேல் (வயது 46). இவர் கடந்த 2015-ம் ஆண்டு டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அந்தோணி ராஜ்(48) டாஸ்மாக் கடைக்கு சென்றபோது, அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுமதியின்றி டாஸ்மாக் கடை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், தமிழ்வேல் நடத்திய கேபிள் டி.வி.க்கு அதிக கட்டணம் வாங்குவதாகவும் மாவட்ட கலெக்டருக்கு அந்தோணி ராஜ் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

வெட்டிக்கொலை

இந்நிலையில் அந்தோணி ராஜ் கடந்த 27.8.2015 அன்று வீடு கட்டியபோது கட்டுமான பொருட்கள் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்து, வாய்க்கால் அடைத்துக் கொள்வதாக கூறி, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தமிழ்வேல், கரிகாலன், அம்பேத்கர் உள்ளிட்டோர் அந்தோணி ராஜ் வீட்டிற்குள் சென்று, அங்கு படுத்திருந்த அவரது தந்தை தனவேலை(62) வெட்டிக்கொலை செய்துள்ளனர்.இது குறித்து அந்தோணி ராஜ் செந்துறை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்வேல், கரிகாலன், அம்பேத்கர், தமிழ்வேலின் தாய் தமிழரசி, சகோதரி வேலரசி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி கர்ணன் தீர்ப்பு அளித்தார். அதில், தமிழ்வேல், அம்பேத்கர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கரிகாலன் ஏற்கனவே இறந்து விட்டார்.மேலும் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசி, வேலரசி ஆகியோரை நிரபராதி என்று விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து தமிழ்வேல், அம்பேத்கர் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story