கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்


கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்
x
தினத்தந்தி 16 July 2017 6:24 AM GMT (Updated: 16 July 2017 6:24 AM GMT)

கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார்.


சென்னை, 



சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இரவு 10 மணியளவில் பூட்டிய கடையில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே கொடுங்கையூர் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடனே 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ராஜதுரை, ஜெயபாலன் ஆகிய 4 பேரும் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்கள் தீயை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். கடையின் முன்பகுதியில் எரிந்த தீயை அணைத்து விட்டு முன்னேறிச் சென்ற அவர்கள் கடையின் ஷட்டரை திறந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிலிண்டர் வெடித்ததில் நாலாபுறமும் தீப்பிளம்புகள் பறந்து சென்றன. 

செல்போனில் படம் பிடித்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் சிக்கினர். 

தீவிபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்து கீழே சாய்ந்து கிடந்தனர். இதனால் தீவிபத்து நடந்த இடத்தில் பெரும் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 10-க்கும் பேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர வழைக்கப்பட்டன. தீவிபத்தில் முதலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ஜெயபாலன், ராஜதுரை ஆகிய 4 பேரும் அவசரம் அவசரமாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஏகராஜ் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த விபத்தில் போலீசார், ஊர்க்காவல் படையினர், பொது மக்கள் உள்ளிட்ட 48 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 32 பேர் கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 11 பேர் சேர்க்கப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் சேர்க்கப்பட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், பொது மக்களில் 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தீவிபத்து சம்பவம் பற்றி கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் காரணமாக கொடுங்கையூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் கூறினார்.

தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை - நிவாரணம் வழங்கப்படும் என்றார் முதல்-அமைச்சர் பழனிசாமி. தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்படும். தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததால் உயிரிழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டு உள்ளார். 


Next Story