அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்துவிட்டது


அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்துவிட்டது
x
தினத்தந்தி 17 July 2017 10:45 PM GMT (Updated: 2017-07-17T21:55:08+05:30)

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அ.தி.மு.க. ஆட்சியில் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்துவிட்டது. தொழில் வர்த்தக சபைகளும், உலக வங்கி அறிக்கைகளும் தமிழக தொழில் வளர்ச்சியின் வீழ்ச்சியை படம் பிடித்து காட்டினாலும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ‘நிதி அயோக்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி, ‘‘தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது’’ என்று மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்திலேயே வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதைக்கேட்ட பிறகும் இந்த அரசுக்கு ஞானோதயம் பிறக்கவில்லை.

2016–ம் ஆண்டில் இந்திய அளவில் பெறப்பட்ட மொத்த அந்நிய முதலீடுகளில் 2.9 சதவீதம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்றும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் அதலபாதாளத்திற்கு போய்விட்டது என்றும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தையும் விட அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பது மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது.

தொழில் செய்வதற்கு ஏற்ற சீர்திருத்தங்களை கொண்டுவரும் மாநிலங்களின் அடிப்படையில் பார்த்தால்கூட நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழகம் 18–வது இடத்தில் இருக்கிறது என்று உலக வங்கி அறிக்கையே அ.தி.மு.க. அரசின் தலையில் ஒரு ‘குட்டு’ வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் 1.65 சதவீத உற்பத்தி மட்டுமே எட்டப்பட்டுள்ளது என்று மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு, சென்னை தொழில் வர்த்தக சபை என அனைத்துமே தமிழகத்தில் தொழில்துறை வீழ்ச்சியடைந்து வருவதை கண்டு கலங்கி நிற்கின்றன. ஆனால் இந்த அரசு எதுபற்றியும் கவலையில்லாமல் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. அரசுக்கு தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றியோ, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலோ, உற்பத்தியை பெருக்குவதிலோ எவ்வித முனைப்பும் இல்லை. ஊழல் வழக்குகளில் சிறைக்குச் சென்றுவிடாமல் இருக்க, தங்கள் பதவியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நோக்கில், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை சீரழித்து கொண்டு இருக்கிறார்கள்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story