ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்ற பயாஸ் - ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது தமிழக அரசு பதில்
ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்ற ராபர்ட் பயாஸ் - ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என ஐகோட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகிய 2 பேரும் கடந்த 2012-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். ஆயுள் தண்டனை கைதிகள் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால், தமிழக அரசு எங்களை மட்டும் 20 ஆண்டுகள் கழிந்த பிறகும் விடுவிக்காமல் உள்ளது. எனவே எங்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.
இந்த மனு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய நிலைகுறித்து மத்திய, மாநில அரசுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில், மத்திய அரசு தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்யாமல் இருந்தது. சமீபத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இப்போது ராபர்ட் பயாஸ் - ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என ஐகோட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
ஆயுள் தண்டனை கைதிகள் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டிய விடுதலை செய்ய முடியாது. அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மீதான கொலை குற்றம் மிகவும் தீவிரமானது. அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்த காலத்தில், மனம் திருந்தினார்கள் என்று நன்னடத்தை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வில்லை. அதனால், அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. 2010-ம் ஆண்டும் இவர்களை விடுதலை செய்ய நன்னடத்தை குழு பரிந்துரை செய்யவில்லை.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியை, ராஜீவ்காந்தி குடும்பத்தினர் மன்னித்து விட்டனர் என்றும் சிறையில் நளினியை சந்தித்து அந்த குடும்ப உறுப்பினர் பேசினார் என்றும் கூறு வதையெல்லாம், நன்னடத்தை குழுவின் ஆய்வுக்கு எடுக்க முடியாது. அதேபோல, இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்றும் விடுதலை செய்யக்கூடாது என்றும் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் எந்த ஒரு கடிதமும் அனுப்பவில்லை, அப்படி ஒரு கடிதம் நன்னடத்தை குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படவும் இல்லை. எனவே, மனுதாரர்கள் இருவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என பதிலில் கூறப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் பதிலை அடுத்து நீதிபதிகள், விசாரணையை வருகிற 18 - ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story