தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு


தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
x
தினத்தந்தி 12 Oct 2017 10:45 PM GMT (Updated: 12 Oct 2017 8:56 PM GMT)

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அகவிலைப்படி (டி.ஏ.) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் க. சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 1.7.17 முதல் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

ஆறாவது மத்திய சம்பள கமி‌ஷன் பரிந்துரைத்த ஊதிய விகிதத்தில் தொடர்ந்து ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 136 சதவீதத்தில் இருந்து 139 சதவீதமாக முன்தேதியிட்டு 1.7.2017 முதல் உயர்த்தி ஆணையிட்டுள்ளது.

2016–ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குவோருக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு கவனமாக ஆய்வு செய்தது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 1.7.17 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கிட முடிவெடுத்துள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 139 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

திருத்தி அமைக்கப்பட்ட அகவிலைப்படி, பகுதிநேர அலுவலர்களுக்கு கிடையாது. திருத்தப்பட்ட அகவிலைப்படி, அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக்குழு – அனைத்திந்திய தொழில் நுட்ப கல்விக்குழு சம்பள விகிதங்களின் கீழ் சம்பளம் பெறும் அலுவலர்கள், அரசு மற்றும் மானியம் பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்–உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், வருவாய் துறையிலுள்ள கிராம உதவியாளர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தை நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story