வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு, மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை


வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு, மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 19 Oct 2017 9:30 PM GMT (Updated: 19 Oct 2017 8:22 PM GMT)

வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு, மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்,

வில்லிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி இருந்த வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபரை, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாகனங்களுக்கு தீ

சென்னை வில்லிவாக்கம் தாமோதரப்பெருமாள் கோவில் தெருவில் 8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு தரை தளத்தில் உள்ள வீட்டில் புரசைவாக்கத்தில் தையல் கடை வைத்து உள்ள பாஸ்கர் (வயது 45) என்பவரும், முதல் மாடியில் அரசு தொலைக்காட்சி (தூர்தர்சன்) ஊழியர் முரளி (46) மற்றும் மோகன் (27) உள்ளிட்டோரும் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்த பாஸ்கரின் 2 மோட்டார் சைக்கிள்களும், முரளிக்கு சொந்தமான ஒரு மோட்டார்சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது.

இதை கண்ட பாஸ்கர், அலறி அடித்து வெளியே ஓடி வந்தார். சத்தம் கேட்டு குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் கீழே இறங்கி வந்தனர்.

போலீசில் புகார்

பின்னர் மோட்டார் சைக்கிள்களில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அருகில் நிறுத்தி ஒரு சைக்கிளும் தீயில் எரிந்து நாசமானது. முரளிக்கு சொந்தமான காரும் லேசாக சேதம் அடைந்தது. அங்கு நிறுத்தி இருந்த மோகனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது.

தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்கள், கார் மீது பெட்ரோலில் நனைக்கப்பட்ட துணி கிடந்தது. எனவே மர்மநபர் பெட்ரோலில் துணியை நனைத்து அதை வாகனங்களின் மீது போட்டு தீ வைத்து எரித்து இருப்பது தெரிந்தது.

இது குறித்து அந்த குடியிருப்புவாசிகள் அளித்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

அதில் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகத்தில் துணிகட்டியபடி கதவை நைசாக திறந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு உள்ளே நுழைகிறார். பின்னர் வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு மோகனின் மோட்டார் சைக்கிளை திருடிவிட்டு கதவை திறந்து வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதற்கிடையில் மர்மநபர்கள் திருடிச்சென்ற மோகனின் மோட்டார்சைக்கிள் அதே பகுதியில் இரண்டு தெருக்கள் தள்ளி அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை நேற்று போலீசார் கண்டுபிடித்தனர். இதுபற்றி வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபரின் உருவ படத்தை வைத்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story