அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியல் தலைவர்களின் ருசிகர பேச்சு


அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியல் தலைவர்களின் ருசிகர பேச்சு
x
தினத்தந்தி 18 Dec 2017 5:30 AM IST (Updated: 18 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமைச் செயலகத்தில் ஒரே அறையில் அமர்ந்திருந்தபோது, அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியல் தலைவர்கள் ருசிகரமாக பேசிக்கொண்டனர்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக, தலைமை சிறப்பு தேர்தல் அதிகாரியான விக்ரம் பாத்ராவிடம் புகார் அளிப்பதற்காக நேற்று அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தலைமைச் செயலகம் வந்திருந்தனர்.

ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து தலைமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ரா பேசினார். அப்போது, மற்ற கட்சியை சேர்ந்த தலைவர்கள் அருகில் உள்ள அறையில் அமர்ந்திருந்தனர். பா.ஜ.க. நிர்வாகிகளிடம் தலைமை சிறப்பு தேர்தல் அதிகாரி பேசிக்கொண்டிருந்தபோது, அறையில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் டி.ஜெயக்குமார், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அந்த நேரத்தில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் அறைக்குள் வந்தனர். மு.க.ஸ்டாலினை பார்த்ததும், தம்பிதுரை உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் எழுந்து நின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்தனர்.

பின்னர், அமைதியாக ஒவ்வொருவரும் இருக்கையில் அமர்ந்தனர். சற்று நேரம் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சாப்பிட முந்திரி பக்கோடா, பால்கோவா வழங்கப்பட்டது. ஆனால், யாரும் அதை ஆர்வமாக சாப்பிடவில்லை. சற்று நேரத்தில், துரைமுருகன் பேச்சை ஆரம்பித்தார். முதலில் மனோஜ் பாண்டியனிடம் தனது கேள்வியை முன்வைத்தார். அப்போது நடந்த ருசிகர பேச்சின் விவரம் வருமாறு:–

துரைமுருகன்:– அப்பா (பி.எச்.பாண்டியன்) எப்படி இருக்கிறார்?. அவருக்கு ‘சுகர்’ அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா?.

மனோஜ் பாண்டியன்:– அவர் நல்லா இருக்காரு.

அமைச்சர் ஜெயக்குமார் (துரைமுருகனை பார்த்து):– அண்ணே சுவிட் சாப்பிடுங்க.

துரைமுருகன்:– அவர்கள் (தேர்தல் கமி‌ஷன்) தந்ததை சாப்பிடவில்லை என்றால், கோபப்பட்டு கொள்வார்கள் என்பதால், ஒரே ஒரு பக்கோடா துண்டை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். சுவிட் எல்லாம் வேண்டாம்.

ஜெயக்குமார்:– தேர்தல் அதிகாரியிடம் என்ன புகார் கொடுக்க வந்தீங்க?. அதை என்னிடம் சொன்னால், நானே பதில் கூறிவிடுகிறேன்.

துரைமுருகன் (சிரித்தபடி):– அது எப்படி...

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:– நீங்கள் செய்த தவறுகளை ஆதாரத்துடன் எடுத்து வந்துள்ளோம். அதனை தலைமை சிறப்பு தேர்தல் அதிகாரியிடம் தான் வழங்குவோம். இங்கு விவாதிக்க முடியாது.

ஜெயக்குமார் (துரைமுருகனை பார்த்து):– உங்களுக்கு ‘சுகர்’ எவ்வளவு இருக்கிறது?

துரைமுருகன்:– சாப்பிடுவதற்கு முன்பாக 115 இருக்கிறது. சாப்பாட்டுக்கு மேல் 125, 130 என்ற அளவில் இருக்கிறது.

ஜெயக்குமார்:– கடல் உணவுகளை அதிகம் சாப்பிடுங்க அண்ணே. சுகர் அளவு குறைஞ்சிடும்.

துரைமுருகன்:– நீங்க... கடல் உணவுகளை அதிகம் சாப்பிடுவீங்களே.

ஜெயக்குமார்:– ஆமா அண்ணே...

துரைமுருகன் (தம்பிதுரையை பார்த்து):– நீங்க... உங்க ஊரில் மாதம் தோறும் ஊர் மக்களுக்கு சாப்பாடு போடுவீங்களே? இப்போதும் சாப்பாடு போடுகிறீர்களா?.

தம்பிதுரை:– ஆமாம், அது ஆண்டாண்டு காலமாக தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஜெயக்குமார் (தம்பிதுரையை பார்த்து):– என்னது... ஊருக்கே சாப்பாடு போடுகிறீர்களா?. அப்படியானால் எத்தனை பேருக்கு சாப்பாடு போடுவீங்க?

தம்பிதுரை:– எல்லோரும் சாப்பிடுவார்கள். அது ஒன்றும் புதிதல்ல.

துரைமுருகன்:– உங்கள் அணியில் பொள்ளாச்சி ஜெயராமன் பெரிய திறமைசாலி, அது உங்களுக்கு தெரியுமா?.

(இந்த நேரத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்)

துரைமுருகன்:– இனி சட்டசபையை எப்போது கூட்டுவீங்க?

ஜெயக்குமார்:– விரைவில் கூட்டுவோம்.

துரைமுருகன்:– வழக்கமாக பொங்கலுக்கு முன்பாக கூட்டப்படுமே.

இவ்வாறு ருசிகர பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தபோது, அ.தி.மு.க. நிர்வாகிகளை தேர்தல் அதிகாரி அழைப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வந்து அ.தி.மு.க.வினர் எழுந்து செல்ல முயன்றனர்.

அப்போது துரைமுருகன், ‘‘அதிகாரியை சந்திப்பதிலும் ஆளும் கட்சிக்கு தான் முன்னுரிமையா?’’ என்று கேள்வி எழுப்ப, அதற்கு தம்பிதுரை, ‘‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தேசிய கட்சிகளுக்கு முதல் இடம். தொடர்ந்து மாநில கட்சிகளுக்கு... ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கி தந்திருக்கிறார்களே’’ என்று பதில் அளித்து சென்றார்.



Next Story