எழுத்தாளர் வாசவன் காலமானார் மு.க.ஸ்டாலின் இரங்கல்


எழுத்தாளர் வாசவன் காலமானார் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x
தினத்தந்தி 18 Jan 2018 10:00 PM GMT (Updated: 18 Jan 2018 9:45 PM GMT)

பிரபல எழுத்தாளர் வாசவன் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பிரபல எழுத்தாளரும், அனைத்துலக தமிழ் எழுத்தாளர் சங்க தலைவருமான வாசவன், சென்னையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 91. ‘பாலமித்ரா’ இதழில் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக இருந்துள்ளார். 360-க்கும் மேற்பட்ட நாவல்களையும், 1000-க்கும் மேற்பட்ட சிறு கதைகளையும் அவர் எழுதியுள்ளார். மேலும், 750-க்கும் மேற்பட்ட அணிந்துரைகளையும் எழுதியிருக்கிறார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை பொற்கிழி விருது, சங்கராச்சாரியார் வழங்கிய வியாச நாயகன் விருது, நற்கதை நம்பி விருது, சி.பா.ஆதித்தனார் விருது போன்றவற்றை பெற்றவர். மேலும், நாராயணிய தொடர் ஆய்வுக்காக டாக்டர் பட்டமும் பெற்றவர்.

சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு

எழுத்தாளர் வாசவன் ராமநாதபுரம் மாவட்டம் இலுப்பைக்குடியில் 1927-ம் ஆண்டு பிறந்தவர். 2001-ம் ஆண்டு, அவர் எழுதிய ‘நெல்லுச்சோறு’ என்ற நாவலுக்காக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் இலக்கிய பரிசு வழங்கப்பட்டது.

மறைந்த வாசவனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை நந்தனம் அன்பு காலனியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை சென்னை கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

வாசவனின் மனைவி ஏற்கனவே காலமாகி விட்டார். அவருக்கு செந்தில்குமார், யோகானந்த் என்ற 2 மகன்களும், வள்ளி என்ற மகளும் உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

எழுத்தாளர் வாசவன் மறைவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

கலைமாமணி விருது பெற்ற எழுத்தாளர் வாசவனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். முதுபெரும் எழுத்தாளர் வாசவன் மறைந்தாலும் அவரது எழுத்துகள் தமிழ் சமுதாயத்திற்கு என்றென்றும் வழிகாட்டும். அவரது மறைவுக்கு இதயப்பூர்வமான அஞ்சலியினை செலுத்தி, அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய உலகினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story