காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்


காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 12 March 2018 11:45 PM GMT (Updated: 12 March 2018 8:55 PM GMT)

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.

சென்னை,

27 வயதான சுபா, கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த செல்வராஜ்-ஜோதி தம்பதியரின் மகள்.

என்ஜினீயரிங் படிப்பை முடித்த சுபா, சென்னையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். சுபாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து அதற்காக மாப்பிள்ளை பார்த்தும் வந்தனர்.

இந்த நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் அங்கு பணிபுரியும் சுபா உள்பட சிலரை சுற்றுலாவுக்காக குரங்கணி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். தோழிகளுடன் சென்ற சுபா காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்துள்ளார்.

சுபாவின் சகோதரர் கமல்ராஜ் கண்ணீருடன் கூறும்போது, “மலையேற்றத்தில் சுபா மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்கு முன்பு 3 முறைக்கு மேல் ஆந்திர மாநிலத்துக்கு மலையேற்றத்துக்காக சென்றுள்ளார். சனிக்கிழமை இரவு அவர் எனக்கு போன் செய்தார். ‘நான் மலையில் பாதுகாப்பாக இருக்கிறேன். எந்த பிரச்சினையும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இறங்கி வந்துவிடுவேன்’ என்று தெரிவித்தார். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது” என்றார்.


நிஷாவின் (30) தந்தை தமிழ்ஒளி. சென்னை வேளச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.

தமிழ்ஒளியின் சொந்த ஊர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி என்பதால் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நிஷாவின் உடலை அங்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் நடக்கும் என அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.


27 வயது அருண் பிரபாகருக்கு, சுரேகா என்ற மனைவியும், பிரணவ் என்ற மகனும் உள்ளனர். சென்னை மதுரவாயலை சேர்ந்தவர்.

அருண்பிரபாகர் குறித்து அவரது நண்பர் விஜயகுமார் கூறும்போது, “நானும், அருணும் பள்ளி நண்பர்கள். என்ஜினீயரிங் முடித்துள்ள அருண் சென்னை துறைமுகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட அருண், அதில் லிம்கா சாதனை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்காகவே மலையேறும் பயிற்சியை மேற்கொண்டார். சென்னை டிரெக்கிங் கிளப்பில் மேலாளராகவும் இருந்தார். அவரது இறப்பு மிகுந்த வேதனையை தருகிறது” என்றார்.


25 வயது புனிதா, ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி அவென்யூ காந்தி சாலை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பாலாஜி என்பவரின் மனைவி. இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதிதான் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு புனிதா, தனது கணவர் வீட்டில் இருந்து சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். தன்னுடன் பணிபுரியும் நண்பர்களுடன் ‘சென்னை டிரெக்கிங் கிளப்’ மூலம் மலையேற்ற பயிற்சிக்காக குரங்கணி வனப்பகுதிக்கு சென்றார்.

திருமணமான 44 நாட்களில் புனிதா, காட்டுத்தீயில் சிக்கி பலியாகிவிட்டார்.


விவேக் (26), ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மகாத்மாபுரத்தை சேர்ந்த நடராஜ்- சரஸ்வதி தம்பதியரின் மகன் ஆவார். என்ஜினீயரான அவர் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். விவேக் அதே பகுதியை சேர்ந்த திவ்யா (26) என்பவரை காதலித்து 3 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திவ்யா எம்.எஸ்சி. முடித்துவிட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். மனைவியை துபாய்க்கு அழைத்து செல்வதற்காக கடந்த 1-ந் தேதி விவேக் மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். வருகிற 28-ந் தேதி விவேக்கும், திவ்யாவும் துபாய்க்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் புதுமண தம்பதியினர் குரங்கணி மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அவர்களுடன் விவேக்கின் நண்பர்களான கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், கண்ணன் ஆகியோரும் சென்றனர்.

தமிழ்செல்வன் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருடைய தந்தை தங்கராஜூ கவுந்தப்பாடியில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார்.

தீயில் கருகி பலத்த காயம் அடைந்த விவேக்கின் மனைவி திவ்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


திவ்யா (27) ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள வட்டக்கல்வலசு கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார்-ஜமுனா தம்பதியரின் ஒரே மகள். எம்.ஏ. பட்டதாரி. திருமணம் ஆகாதவர். சென்னை தி.நகரில் தங்கி அங்குள்ள ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சென்னையை சேர்ந்த மலையேற்ற பயிற்சி குழுவினருடன் திவ்யா குரங்கணிக்கு சுற்றுலா சென்றபோது பலியானார். திவ்யாவுக்கு அவருடைய பெற்றோர் திருமணத்துக்காக மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது.

திவ்யாவின் தாத்தா வி.எஸ்.மாணிக்கசுந்தரம் ஈரோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.


தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகவத் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-சாந்தி தம்பதியினரின் ஒரே மகள் அகிலா என்ற அகிலாண்டேஸ்வரி (வயது 24). சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்த 20-க்கும் மேற்பட்டோர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்தனர். அவர்களுடன் சென்ற அகிலா காட்டுத்தீ விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.

கும்பகோணம் பாணாதுறையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்த அவர் அந்த இரண்டு வகுப்புகளிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்.

படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அகிலா, இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

மகள் பலியானது குறித்து அகிலாவின் தாயார் சாந்தி கண்ணீர் மல்க கூறுகையில், “அவளுக்கு படிப்பைத் தவிர ஆங்கில இலக்கியத்திலும் அதிக ஆர்வம் உண்டு. அடுத்தவர்களுக்கு பயனுள்ள வகையில் வாழவேண்டும் என்று அடிக்கடி கூறுவாள். எங்களுக்கு இருந்த மகளையும் பறிகொடுத்து விட்டு நிர்க்கதியாக நிற்கிறோம்” என்று கதறினார்.


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் தாமோதரன். இவரது மகன் விபின் (34). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் மலையேறும் பயிற்சியில் ஆர்வம் கொண்டவர். இவரும் கிணத்துக்கடவு விஸ்வநாதனின் மகள் திவ்யாவும் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்தபோது காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திவ்யாவின் தந்தை விஸ்வநாதன் இறந்த உடன் திவ்யாவும், விபினும் கிணத்துக்கடவுக்கு வந்து விட்டனர். அங்கு மாமனார் நடத்தி வந்த மர அறுவை மில்லை விபின் கவனித்து வந்தார். இருவரும் கடந்த 4 நாளுக்கு முன்பு கிணத்துக்கடவில் இருந்து தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைக்கு மலை ஏற்ற பயிற்சிக்காக சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டனர். இதில் விபின் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். திவ்யா படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு, மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


காட்டுத்தீயில் சிக்கி பலியான ஹேமலதா(வயது 30) மதுரை புதுவிளாங்குடி ராமமூர்த்திநகரை சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவருடைய 2-வது மகள் ஆவார். இன்னும் திருமணமாகவில்லை.

இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மலையேற்ற பயிற்சிக்காக சென்னையை சேர்ந்த தன் தோழிகளுடன் குரங்குணி மலைக்கு சென்றிருந்தார். அப்போது தான் காட்டுத்தீயில் சிக்கி இறந்து விட்டார். 

Next Story