எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மத்தியில் போதை வாலிபர்கள் ரகளை


எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மத்தியில் போதை வாலிபர்கள் ரகளை
x
தினத்தந்தி 18 March 2018 11:15 PM GMT (Updated: 18 March 2018 10:57 PM GMT)

உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் ஏறி பயணிகளிடம் மோதலில் ஈடுபட்ட போதை வாலிபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு தினமும் இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலில் படுக்கை வசதி கொண்ட எஸ்-4 முன்பதிவு பெட்டியில் ஏறிய 8 வாலிபர்கள் காலியாக இருந்த படுக்கைகளில் படுத்துக்கொண்டனர்.

ரெயில் புறப்பட்ட சற்று நேரத்தில் அருகில் உள்ள மாம்பலம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு எஸ்-4 பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் சிலர் ஏறினார்கள். அவர்கள் தங்களுக்கு உரிய இருக்கையை நோக்கி வந்தனர். ஆனால், அதில் வாலிபர்கள் சிலர் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த வாலிபர்களை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர்கள் 8 பேரும் போதையில் இருந்ததால், படுக்கையில் இருந்து எழுந்திருக்க மறுத்தனர். எனவே, ரெயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகரை பயணிகள் அழைத்தனர். அவர் வருவதற்குள் ரெயிலும் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சற்று நேரத்தில், டிக்கெட் பரிசோதகர் வந்து 8 பேரிடமும் டிக்கெட் கேட்டார். ஆனால், அவர்கள் விழுப்புரம் வரை செல்லும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையே கையில் வைத்திருந்தனர்.

இதைப்பார்த்தவுடன், “முன்பதிவு இல்லாத பெட்டிகள், ரெயிலில் முதலிலும், கடைசியிலும் உள்ளது. ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்றதும், அந்த பெட்டிகளில் சென்று ஏறிக்கொள்ளுங்கள். அதுவரை யாரையும் தொந்தரவு செய்யாமல் வாசல் அருகே சென்று நில்லுங்கள்” என்று டிக்கெட் பரிசோதகர் கூறினார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த வாலிபர்கள், “நாங்கள் டிக்கெட் எடுத்திருக்கிறோம். அதனால் இந்த பெட்டியில் தான் பயணிப்போம்” என்று டிக்கெட் பரிசோதகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலமை மோசமடைவதை கண்ட அவர், ரெயிலில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.

போலீஸ் வருவதை அறிந்த அந்த வாலிபர்கள், டிக்கெட் பரிசோதகர் மற்றும் பயணிகளிடம் மோதலில் ஈடுபட்டனர். ரெயிலில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை அடித்து உடைத்தனர். டிக்கெட் பரிசோதகரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், ரெயில் பல்லாவரம் ரெயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

உடனே, சுதாரித்துக்கொண்ட பயணிகள் ரெயிலில் உள்ள சங்கிலியைப் பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்கள். சரியாக, பல்லாவரம் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயில் நின்றதும், போதை வாலிபர்கள் 8 பேரும் ரெயிலை விட்டு இறங்கி, தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து ரெயில் மீது வீசினார்கள்.

அதில், குளிர்சாதன 3-ம் வகுப்பு பி-2, பி-3 பெட்டிகளில் உள்ள 3 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இந்த சம்பவத்தின்போது, பல்லாவரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை காவலர் தனபால் பணியில் இருந்தார். உடனே, அவர் அவசர போலீஸ் 100-க்கும், ரெயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார்.

சற்று நேரத்தில், பல்லாவரம் ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்ளே வந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள், அருகில் உள்ள தண்டவாளத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஒரு சில வாலிபர்களின் கைகளில் ரத்தக் காயங்கள் இருந்தன. ரெயிலில் உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுத்து அவர்களாகவே கைகளை வெட்டிக் கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு, 20 நிமிட தாமதத்திற்கு பிறகு, பல்லாவரம் ரெயில் நிலையத்தில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

ஆனால், குளிர்சாதன பெட்டிகளில் உள்ள கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தால், அதில் உள்ள கண்ணாடி துண்டுகள் படுக்கைகளில் சிதறிக் கிடந்தன. உடைந்த பகுதி வழியாக குளிர் காற்றும் வெளியேறிக் கொண்டிருந்ததால், போதிய அளவு குளிர் உள்ளே இல்லை. இதனால், தாம்பரம் ரெயில் நிலையம் சென்றதும், அதில் உள்ள பயணிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே, அங்குள்ள ரெயில்வே அதிகாரிகள் வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். உடனடியாக, ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, ரெயிலில் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள் அகற்றப்பட்டன. உடைந்த ஜன்னல் கண்ணாடிக்கு பதிலாக மாற்றுக் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. இதனால், அங்கு ரெயில் 30 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகே, மலைக்கோட்டை ரெயில் புறப்பட்டு சென்றது. போதை வாலிபர்கள் ரகளையால் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ரெயிலில் ரகளையில் ஈடுபட்ட போதை வாலிபர்களை பல்லாவரம் ரெயில் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணை நடத்தியதில், திருவொற்றியூரை சேர்ந்த செல்வம் (வயது 19), வெங்கடேஷ் (18), ராமு (18), கணேஷ் (18), சரத் (18) ஜெயப்பிரகாஷ் (18) என்பது தெரியவந்தது. ஏனைய இருவருக்கும் 17 வயதே என்பதால், அவர்களது பெயர்கள் வெளியிடப்படவில்லை.

போதையில் இருந்த வாலிபர்களிடம் இருந்து கஞ்சா பாக்கெட்டுகளும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் அனைவரும் கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் உத்தரவின் பேரில், பிடிபட்ட 8 வாலிபர்கள் மீதும் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தல், ரெயில்வே சொத்துக்கு சேதம் விளைவித்தல், ரெயிலை வழியில் நிறுத்துதல், பயணிகளுக்கு இடையூறு செய்தல், பயணிகளை அச்சுறுத்துதல், ரெயிலை மறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story