ரத யாத்திரைக்கு எதிர்ப்பு; சாலைமறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க எம்.எல் ஏக்கள் கைது


ரத யாத்திரைக்கு எதிர்ப்பு; சாலைமறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க  எம்.எல் ஏக்கள் கைது
x
தினத்தந்தி 20 March 2018 6:36 AM GMT (Updated: 20 March 2018 6:36 AM GMT)

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியலில், ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். #MKStalin #RathaYatra #VHPRadhaYatra #RamarajyaRathaYatra

சென்னை

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது. உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார். ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, இன்று  ராஜபாளையம் வருகிறது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வந்து , அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.

கேரளாவிலிருந்து தமிழகம் வரவுள்ள இந்த ரதயாத்திரைமூலம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுமதி வழங்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்திவருகின்றன. மேலும், நேற்று தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். பின்னர், வெளிநடப்புச் செய்தனர்.

தமிழகம் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சட்டப்பேரவையில் தி.மு.க சார்பில்   கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரபட்டது. தி.மு.க செயல் தலைவர் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தீர்மானம் கொண்டு வந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் ராமராஜ்ஜிய ரத யாத்திரையால் ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக காவல்துறை டிஜிபி மற்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க வேண்டும். தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்துதான் ரத யாத்திரை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அங்கெல்லாம் பிரச்னை ஏற்படவில்லை. தமிழகத்தில் எல்லா மதத்தினருக்கும் எல்லா உரிமையும் உண்டு. எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்க 129 பேர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ரத யாத்திரை விவகாரத்தில் தேவையில்லாமல், அரசியல் சாயம் பூச வேண்டாம் என முதலமைச்சர்  கூறினார்.

முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றுகூறி சபாநாயகரை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அமைதி காக்குமாறு சபாநாயகர் தனபால் வேண்டுகோள் விடுத்தும், தொடர்ச்சியாக திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.

தமிழகம் அமைதி பூங்காவாக சிறந்து விளங்குகிறது. இதை பொருக்க முடியாமல் ஸ்டாலின் செயல்படுகிறார். காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கம்யூ. ஆளும் கேரளாவில் ரதயாத்திரை அனுமதி என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

ரத யாத்திரையை ரத்து செய்ய கோரி முழக்கம் மிட்டவாரே தி.மு.க உறுப்பினர்கள் வெளியேறினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  தி.மு.க எம்.எல்.ஏக்கள் சாலை மறியலில், ஈடுபட்டனர்.

சாலைமறியலில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின் உள்பட தி.மு.க  எம்.எல் ஏக்கள் கைது செய்யபட்டனர்.

Next Story