பா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம் கனிமொழி எம்.பி. ஆவேசம்


பா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்துவோம் கனிமொழி எம்.பி. ஆவேசம்
x
தினத்தந்தி 21 April 2018 10:15 PM GMT (Updated: 21 April 2018 7:20 PM GMT)

பா.ஜனதாவை நாட்டில் இருந்து அப்புறப்படுத்து வோம் என்று சென்னை யில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார். #Kanimozhi

சென்னை, 

காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமை தாங்கினார்.

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசிய தலைவர் ஏ.கே.தஷ்ரீப் ஜஹான், பொதுச்செயலாளர் வக்கீல் எம்.ஆயிஷா, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, திராவிடர் கழகத்தை சேர்ந்த வக்கீல் அருள்மொழி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியின் கோரதாண்டவம் தான் இந்துத்துவ தீவிரவாதம். இதைவிட சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை. பயத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த குற்றத்தை செய்திருக்கிறார்கள். இதைத்தான் பா.ஜனதா தொடர்ந்து செய்து வருகிறது.

நாட்டில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் இயக்கமாக பா.ஜனதா மாறியிருக்கிறது. கோவில் கருவறையில் கொடூரத்தை நிகழ்த்தியது தான் அவர்கள் இந்து மதத்தின் மீது வைத்திருக்கும் பக்தியா? உலகின் கண்கள் இந்தியாவை ஏளனமாக பார்க்கும் வகையில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சி வெளியேற்றப்பட்டால் தான் இந்தியாவில் வளர்ச்சி, அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு மற்றும் மக்களிடையே ஒற்றுமை உணர்வு ஏற்படுவதற்கான வழிபிறக்கும். தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காலை வைக்கவிடாமல் அப்புறப்படுத்தியதுபோல, பா.ஜ.க. என்ற வார்த்தையை யாரும் உச்சரிக்காத வகையில் நாட்டில் இருந்து அப்புறப் படுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சேகர்பாபு எம்.எல்.ஏ., ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story