மாநில செய்திகள்

நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய தயார் + "||" + NEET Exam in write comes up For Tamil students Ready to help

நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய தயார்

நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய தயார்
நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் வரும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய தயார் என்றும் பாதுகாப்பிற்காக மாணவிகளை தங்கள் வீட்டிலேயே தங்க வைப்பதாகவும் ராஜஸ்தான் தமிழ்சங்க தலைவர் சவுந்தரநாயகி தெரிவித்தார்.
சென்னை,

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், ராஜஸ்தானுக்கு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உதவி செய்ய தயார் என்று ராஜஸ்தான் தமிழ் சங்க தலைவரும், தொழிலதிபருமான சவுந்தரநாயகி தெரிவித்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் ஆவார்.


தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் வரும் மாணவர்களுக்கு வழிகாட்டும் உங்கள் முயற்சி எந்த வகையில் இருக்கிறது என்பது குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது.

தாய் தமிழகத்தில் இருந்து ராஜஸ்தான் வரும் என் செல்வங்களை வரவேற்கிறேன். அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல், சுதந்திரமான மனநிலையுடன் தேர்வு எழுதி, மீண்டும் தமிழகம் செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கோ, பஸ் நிலையங்களுக்கோ, ரெயில் நிலையங்களுக்கோ வந்து சேரும் மாணவர்கள் எங்களை தொடர்பு கொள்ள சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம். முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் எங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை (9790783187, 7357023549, 8696922117) அறிவித்து இருக்கிறோம்.

அஜ்மீர், ஜெய்ப்பூர், கோடா, உதய்பூர், ஜோத்பூர், பிகானர் ஆகிய தேர்வு மையங்களில் நம்முடைய மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் என்ன உதவி வேண்டும் என்று கேட்கிறார்களோ?, அந்த உதவியை செய்ய தயாராக இருக்கிறோம். அவர்களை தங்க வைக்க இடங்கள் ஏற்பாடு செய்ய உள்ளோம்.

மாணவிகளை பாதுகாப்பு கருதி என் வீட்டிலேயே தங்க வைக்க உள்ளேன். நல்ல உணவு வசதி மற்றும் அவர்கள் தேர்வு மையத்திற்கு சென்று வர வாகன வசதிகளை நாங்கள் செய்ய உள்ளோம். என்னுடன் இணைந்து முருகானந்தம், பாரதி ஆகியோரும் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுவரை எண் தொலைபேசி எண்ணில் மட்டும் 22 மாணவர்கள் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தற்போது ரெயிலில் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள். ரெயிலில் இருந்து இறங்கியவுடன் உதவியை கேட்பதாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் வருகைக்காக நாங்களும் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் தமிழ்சங்க உறுப்பினர் முருகானந்தம் கூறும்போது, ‘மொழி தெரியாத ஊருக்கு வருகிறோம் என்று மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் தேர்வு மையத்திற்கும், தேர்வு மையத்தில் இருந்து தங்கும் இடத்திற்கும் அழைத்து செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்’ என்றார்.