கோவிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து: வேன் கவிழ்ந்து 6 பேர் பலி; 17 பேர் காயம்
கோவிலுக்கு சென்று திரும்பியபோது வேன் கவிழ்ந்து 4 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 17 பேர் காயம் அடைந்தார்கள்.
சாத்தூர்,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மாதாங்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கெங்கையா (வயது 42). முன்னாள் ராணுவ வீரரான இவர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்து முடி காணிக்கை செலுத்த நேற்று உறவினர்களுடன் ஒரு வேனில் சென்றார். வேனை கண்ணன் (33) என்பவர் ஓட்டிச்சென்றார்.
காலையில் அக்னி சட்டி எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் சாமி தரிசனம் செய்த பின்னர் வேனில் ஊருக்கு புறப்பட்டனர். கெங்கையா உள்ளிட்ட சிலர் ஆட்டோவில் திரும்பினர். உறவினர்கள் 23 பேர் வேனில் வந்தார்கள்.
பிற்பகல் 2 மணி அளவில் சாத்தூர் அருகே ராமச்சந்திராபுரம் என்ற இடத்தில் ஒரு வளைவில் வேன் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக முன் சக்கரம் கழன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் வேன் கவிழ்ந்தது. அந்த வேன் செங்குத்தாக நின்றது. வேன் கவிழ்ந்ததும் டிரைவர் கண்ணன் அங்கிருந்து ஓடிவிட்டார்.
வேனில் வந்த அனைவரும் படுகாயம் அடைந்தார்கள். அவர்களில் பேச்சியம்மாள் (50), குருவம்மாள் (65), அமுதா (45), போத்தையா (65), மணிகண்டன் (34) ஆகிய 5 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். குருலட்சுமி (18) என்பவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் டவுன் போலீசார் விரைந்து சென்று கிராமத்தினருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 17 பேர் 8 ஆம்புலன்சுகள் மூலம் மதுரை, சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பலியானோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story