ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ.3.50 விலை உயருகிறது?


ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ.3.50 விலை உயருகிறது?
x
தினத்தந்தி 18 May 2018 5:00 AM IST (Updated: 18 May 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை ஏற்றாத நாட்களை சமாளிக்க ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.4-ம், டீசல் விலை ரூ.3.50-ம் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதற்கிடையில் கடந்த மாதம்(ஏப்ரல்) 24-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை 19 நாட்கள் விலையை ஏற்றவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல் காரணம் என்ற கூறப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 14-ந்தேதியில் இருந்து மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயர தொடங்கியது.

கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 73 காசும், டீசல் விலை 93 காசும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 23 காசு உயர்ந்து, 78 ரூபாய் 16 காசுக்கும், டீசல் 24 காசு உயர்ந்து 70 ரூபாய் 40 காசுக்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.4 வரையிலும், டீசல் விலையை ரூ.3 முதல் 3 ரூபாய் 50 காசு வரையிலும் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வதாலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பதாலும் விலை அதிகரிப்பதாக கூறி வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது கர்நாடக தேர்தலுக்காக 19 நாட்கள் விலை ஏற்றாமல் இருந்ததை சமாளிக்க இந்த விலை உயர்வை செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளியிடம் கேட்டபோது, ‘எங்களுக்கு அதுபோன்ற தகவல் எதுவும் வரவில்லை. ஆனால் இந்த அளவு ஒரே நாளில் பெட்ரோல்-டீசல் விலை உயர 90 சதவீதம் வாய்ப்பு இல்லை. அப்படி விலையை ஏற்றவும் முடியாது. அது சரியாகவும் இருக்காது’ என்றார்.

Next Story