தூத்துக்குடியில் 16 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள்


தூத்துக்குடியில் 16 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள்
x
தினத்தந்தி 7 Jun 2018 3:56 AM GMT (Updated: 7 Jun 2018 3:56 AM GMT)

தூத்துக்குடியில் நாட்டுப்படகு மீனவர்கள் 16 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்
ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்து வந்தது.  இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆலையால் பல்வேறு நோய் பாதிப்புகள், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகின்றன என கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நாட்டுப்படகு மீனவர்களும் கடந்த 22ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களில் 2 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த போராட்டம் 100வது நாளில் வன்முறையாக வெடித்தது.  இதனால் போலீசார் கலவரம் செய்தவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.  தொடர்ந்து வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக நடந்த துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் 13 பேர் பலியாகினர்.  பலர் காயமடைந்தனர்.  அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது.  இதனால் 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.  அவர்கள் இன்று மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

Next Story