எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 2-வது கட்டமாக 52 கைதிகள் புழல் ஜெயிலில் இருந்து விடுதலை


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 2-வது கட்டமாக 52 கைதிகள் புழல் ஜெயிலில் இருந்து விடுதலை
x
தினத்தந்தி 12 Jun 2018 10:45 PM GMT (Updated: 12 Jun 2018 10:45 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 2-வது கட்டமாக 8 பெண்கள் உள்பட 52 பேர் சென்னை புழல் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.

செங்குன்றம்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் ஜெயிலில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது.

முதல் கட்டமாக 6-ந் தேதி 67 கைதிகள் சென்னை புழல் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து சென்னை புழல் ஜெயிலில் இருந்து 44 ஆண்கள், 8 பெண்கள் என 52 பேரும், திருச்சி ஜெயிலில் இருந்து 10 பேரும், சேலம் ஜெயிலில் இருந்து 4 பேரும், பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து 2 பேரும் என மொத்தம் 68 கைதிகளை 2-வது கட்டமாக விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி புழல் ஆண்கள் ஜெயிலில் உள்ள 700-க்கும் மேற்பட்டவர்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த 44 கைதிகள் நேற்று காலை விடுவிக்கப்பட்டனர். இவர்களை சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன், சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி ஆகியோர் அறிவுரைகள் கூறி வழி அனுப்பி வைத்தனர்.

சிறு தொழில் தெரிந்தவர்களுக்கு வெளியில் சென்று வாழ்வாதாரத்தை தேடி கொள்ளும் வகையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. விடுதலையான கைதிகள் மகிழ்ச்சியோடு தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இதே போல் புழல் பெண்கள் ஜெயிலில் உள்ள 60-க்கும் மேற்பட்டோரில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு இட்லி கடை வைத்துக்கொள்ள தேவையான உபகரணங்களும், தையல் கடை வைத்துக்கொள்ள தையல் எந்திரங்களையும், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களையும் டி.ஐ.ஜி. முருகேசன் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

இது குறித்து டி.ஐ.ஜி. முருகேசன் கூறுகையில், ‘நன்னடத்தையின் அடிப்படையில் 52 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். வெளியில் சென்று திருந்தி வாழவும், தொழில் தொடங்கி வாழ்க்கையை நடத்தவும் தைரியம் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

முன்னதாக ஜெயிலில் இருந்து வெளியே வருபவர்களை வரவேற்க அவர்களின் உறவினர்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர். கூண்டில் இருந்து திறந்து விடப்பட்ட பறவைகளை போல வெளியே வந்த அவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி, ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். ஒவ்வொருவரின் முகத்திலும் சோகம் மறைந்து மகிழ்ச்சி மலர்ந்து இருந்தது.

விடுதலையான, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மல்லிகா, தனலட்சுமி, சிவகாமி, தெய்வம், சுமதி, சுந்தரி, சாந்தி, கோமதி ஆகியோர் கூறியதாவது.

நாங்கள் ஜெயிலில் இருந்து விடுதலை ஆவோம் என எதிர்பார்க்கவே இல்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் தண்டனை அனுபவித்து விட்டு தற்போது வீடு திரும்ப உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

ஜெயிலில் எங்களுக்கு சுய தொழில் கற்றுக்கொடுத்து உள்ளனர். நாங்கள் பிழைப்பு நடத்திக்கொள்ள தேவையான எந்திரங்களை தற்போது கொடுத்துள்ளனர். வெளியில் சென்று எந்த குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் குடும்பத்தோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துவோம்.

Next Story