தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது - போலீஸ்


தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தின் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது - போலீஸ்
x
தினத்தந்தி 2 July 2018 12:17 PM GMT (Updated: 2018-07-02T17:47:41+05:30)

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் 3 மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.

100-வது நாளாக கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் நடந்தது. அப்போது கலவரம் ஏற்பட்டதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 
இந்த சம்பவத்தில் ‘மப்டியில்’ இருந்த போலீஸார் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது. போலீஸாரின் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டு வழக்குகள் தொடரப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் பதிலளிக்க காவல் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இப்போது பதிலளித்து உள்ள காவல்துறை, ஆட்சியர் அலுவலகம் முன்னதாக கூடிய 20 ஆயிரம் பேரை களைக்க அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்த 150 பேருக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என தெரிவித்து உள்ளது. 

துப்பாக்கி சூடு தொடர்பாக 5 வழக்குகள் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story