திருமணம் செய்வதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி காதலி மீது போலீசில் ஆட்டோ டிரைவர் புகார்


திருமணம் செய்வதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி காதலி மீது போலீசில் ஆட்டோ டிரைவர் புகார்
x
தினத்தந்தி 5 July 2018 10:15 PM GMT (Updated: 5 July 2018 9:10 PM GMT)

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ரூ.7 லட்சத்தை மோசடி செய்த காதலி மீது போலீசில் ஆட்டோ டிரைவர் புகார் அளித்து உள்ளார்.

சென்னை,

சென்னை கிழக்கு தாம்பரம் அனந்தபுரத்தை சேர்ந்தவர் ராமு (வயது 34). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சொந்தமாக கோழிப்பண்ணை வைத்துள்ளேன். ஆட்டோவும் ஓட்டி வருகிறேன். நான் கடந்த 7 ஆண்டுகளாக சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து வந்தேன். நானும், எனது காதலியும் எனது ஆட்டோவில் ஒன்றாக சுற்றி திரிந்தோம். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். சந்தியாவின் வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். சந்தியாவின் பெற்றோர் எங்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி எங்களது திருமணத்திற்கும் சம்மதித்தனர்.

இந்தநிலையில் எனது காதலி சந்தியா அவரது பெற்றோருடன் வசிக்கும் வீடு கடனில் மூழ்கியுள்ளது என்றும், அந்த வீட்டை மீட்க பணம் தேவைப்படுவதாகவும் கூறினார். இதற்காக நான் ரூ.7 லட்சம் வரை கொடுத்தேன்.

தற்போது திடீரென்று சந்தியா என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். எனது காதலையும் முறித்துக்கொண்டார். சந்தியாவின் பெற்றோரும் என்னிடம் பேசுவதில்லை.

சந்தியாவை எனக்கு திருமணம் செய்து வைக்கவும் அவரது பெற்றோர் மறுக்கிறார்கள். என்னை 7 வருடமாக காதலித்து, ரூ.7 லட்சத்தையும் பறித்துக்கொண்டு என்னை சந்தியா தவிக்கவிட்டுவிட்டார்.

தற்போது அவர் என்னைப்போல் வேறு சிலரிடமும் காதலித்து பணம் பறிப்பதாக தெரியவந்துள்ளது. என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவரிடமும், டாக்சி டிரைவர் ஒருவரிடமும் அவர் தற்போது பழகி வருகிறார்.

திருமண ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டனர். பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டால் என்னை கொலை செய்துவிடுவதாக சந்தியாவின் பெற்றோர் மிரட்டுகிறார்கள். இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story