8 வழிச்சாலையின் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போராடுவதா? சென்னை ஐகோர்ட்டு கண்டனம்


8 வழிச்சாலையின் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போராடுவதா? சென்னை ஐகோர்ட்டு கண்டனம்
x
தினத்தந்தி 6 July 2018 12:15 AM GMT (Updated: 5 July 2018 10:46 PM GMT)

8 வழிச்சாலையின் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் போராடுவதற்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

சென்னை, 

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்ற போதிலும் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு தேவையான விளக்கங்களை தெரிவித்து நிலத்தை அளவீடுசெய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில், கே.வி.சுசீந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மேற்கு மாவட்ட, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளேன். சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்வதைக் கண்டித்து, எங்கள் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் மாரியம்மன் கோவில் திடலில், வருகிற 8-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். இந்த கூட்டத்துக்கு எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்க உள்ளார்.

இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்துவிட்டோம். அதுமட்டுமல்ல, கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதியே, ஓமலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிக் கேட்டு மனு கொடுத்துவிட்டேன். அவர் பரிசீலிக்காததால், கடந்த 26-ந்தேதி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஓமலூர் இன்ஸ்பெக்டரிடம் மற்றொரு மனு கொடுத்தோம். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

இந்த பொதுக்கூட்டம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் வராமல், அமைதியான முறையில் நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்தும், அனுமதி வழங்க போலீசாருக்கு விருப்பம் இல்லை. எனவே, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நீதிபதி வருத்தம் தெரிவித்தார். திட்டத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்துக்கொள்ளாமல், போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற வழக்கை ஊக்குவிக்க முடியாது. சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் என்ற மிகப்பெரிய திட்டத்தை தமிழக அரசு முதல் முதலாக கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், சென்னை- சேலம் இடையே உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள் எல்லாம் மிகப்பெரிய மாநகரங்களுடன் இணைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, சென்னை-சேலம் இடையே ஏற்படும் பயண காலதாமதத்தை இந்த திட்டம் குறைக்கிறது. 8 வழிச்சாலை வசதி கிடைக்கும்போது, இந்த பகுதிகளில் சர்வதேச அளவிலான நிறுவனங்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் தொடங்குவார்கள். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலை அதிகம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.

இந்த 8 வழிச்சாலை திட்டம் குறித்து இந்த கோர்ட்டில் இருந்த வக்கீல்களிடம் கருத்து கேட்டேன். அனைவருமே, இந்த திட்டத்தை வரவேற்பதாகவும், ஆதரிப்பதாகவும் கூறினார்கள். ஒரே ஒரு வக்கீல் மட்டும், 8 வழிச்சாலையை தரை மார்க்கமாக அமைப்பதற்கு பதில், உயர்மட்ட மேம்பாலமாக அமைத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று கூறினார்.

பெரும் செலவில் உருவாக்கப்படும், இந்த 8 வழிச்சாலை திட்டத்தின் நோக்கம் குறித்து தெரியாமலும், புரிந்துக் கொள்ளாமலும் எதிர்க்கக் கூடாது. இதற்காக, கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தக் கூடாது. இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி டி.ராஜா உத்தரவில் கூறியுள்ளார். 

Next Story