பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுதா தேவியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், 12 மணி நேரம் சோதனை


பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுதா தேவியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், 12 மணி நேரம் சோதனை
x
தினத்தந்தி 6 July 2018 2:58 PM GMT (Updated: 2018-07-06T20:31:31+05:30)

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுதா தேவியின் சென்னை வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சுமார் 12 மணி நேரம் சோதனை நடத்தினர். #SudhaDevi

சென்னை,

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் முட்டை வினியோகிக்கும் பொறுப்பை காண்டிராக்ட் எடுத்து அந்தந்த மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப முட்டைகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம், அரசு நிர்ணயித்த முட்டையை விட, ‘புல்லட்’ எனப்படும் எடை மற்றும் தரம் குறைந்த முட்டைகளை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு வழங்குவதாக தெரியவந்தது. இதனால் மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்யும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்யும் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் சத்து மாவு தயாரிக்கும் நிறுவனத்தை வருமானவரித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

போலியான நிறுவனங்கள் மூலம் முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு போன்றவற்றை அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகம் செய்தது போன்று போலி கணக்குகள் தயாரித்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, ‘கிருஷ்டி பிரைடு கிராம்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த நிறுவனம் அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு முட்டை, சத்துமாவு மற்றும் பருப்பு ஆகிய உணவுப் பொருட்களை அனுப்பி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர்ந்து புகார் வந்ததால் அதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் கிருஷ்டி பிரைடு கிராம் நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

சென்னையில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தியாகராயநகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளன. அங்கு வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மயிலாப்பூரில் வடக்கு மாடவீதியில் உள்ள அக்னி எஸ்டேட்ஸ் மற்றும் பவுண்டேசன் நிறுவனத்தில் வருமானவரித்துறையைச் சேர்ந்த 10 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிறுவனங்களின் அறங்காவலர் ஜெயப்பிரகாஷ், உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி ஆகியோரின் வீடுகள் கோட்டூர்புரம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் உள்ளன. அங்கும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தநிலையில், சத்துணவு முட்டை விநியோகம் செய்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, சென்னையை அடுத்த நெற்குன்றத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிர்வாக அலுவலர் எம்.சுதாதேவி ஐ.ஏ.எஸ். வீட்டிலும் சோதனை நடந்தது. சுமார் 12 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சுதாதேவி, நெற்குன்றத்தில் உள்ள ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் குடியிருப்பின் 16- வது மாடியில், வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா என்பது குறித்து, உறுதியான தகவல்களை தெரிவிக்க, வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதேநேரம், தேவைப்பட்டால், பெண் ஐ. ஏ.எஸ் அதிகாரி சுதா தேவியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story