சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம் வைகோ அறிக்கை


சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம் வைகோ அறிக்கை
x
தினத்தந்தி 6 July 2018 11:12 PM GMT (Updated: 2018-07-07T04:42:05+05:30)

இளைய தலைமுறையினர் விடுதலைப்புலிகளாக மாறி எழுந்து வருவார்கள் என்றும், சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம் என்றும் வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான விஜயகலா மந்திரியாகப் பணியாற்றி வந்தார். அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “இலங்கைத் தீவில், வடக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. சான்றாக, அண்மையில் ஒரு 6 வயதுக் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளது. கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகள், நடைபெறுவதால் தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வந்தால்தான் இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியும். தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியும்” என்று பேசியதுதான் உண்மை நிலை ஆகும்.

ஐக்கிய தேசியக் கட்சியினர், தங்கள் கட்சியின் சார்பில் மந்திரி பொறுப்பில் இருந்த ஒரேயொரு தமிழரான விஜயகலாவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததால், அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

வருங்காலத்தின் கட்டாயம்

தேசியத் தலைவர் பிரபாகரனுடைய நேரடிக் கண்காணிப்பில் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பில் தமிழர் தாயகம் இருந்தபோது, மக்களுக்கு எதிராக கிரிமினல் குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை. களவு, திருட்டு, மது, போதை, விபச்சாரம், கொலைகள், எதுவும் நடைபெறாமல் தமிழர்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ்ந்தனர். கலாச்சாரமும், பண்பாடும் பாதுகாக்கப்பட்டது.

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. சிங்கள ராணுவத்தினரும், போலீசாரும் இளைய தலைமுறையைப் பாழாக்க மதுவையும், போதைப் பொருளையும் திணிக்கின்றனர். கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன.

கிரேக்க புராணத்தில் சாம்பல் குவியலில் இருந்து பீனிக்ஸ் பறவை விண்ணில் எழுந்ததுபோல், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் மண்ணில் புதைந்த வித்துகள் விருட்சமாவதைப் போல இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம். வரலாற்றில் எழுதப்படப்போகும் பாடம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story