சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு


சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 July 2018 12:15 AM GMT (Updated: 7 July 2018 12:06 AM GMT)

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் புதிதாக 8 வழி பசுமைச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக எனக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஆர்ஜிதம் செய்து கையகப்படுத்த மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.) உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த திட்டம் சட்டவிரோதமானது. சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் சூழல் குறித்து உரிய ஆய்வு செய்யாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது.

அத்துடன் பாதிக்கப்படும் மக்களிடம் உரிய ஆட்சேபனை களை பெறவில்லை. எனவே இந்த திட்டத்துக்காக எங்கள் நிலத்தை கையகப் படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்யவேண்டும். இந்த திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜராகி, இத்திட்டத்தை எதிர்த்து ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் ஐகோர்ட்டு அமர்வில் (டிவிசன் பெஞ்ச்) நிலுவையில் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கையும், அந்த அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஐகோர்ட்டு அமர்வின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அப்போது, 8 வழி சாலை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் சக்திவேல் கோரிக்கை விடுத்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

இதேபோல் இந்த திட்டம் தொடர்பாக வக்கீல் சுரேஷ் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு ஏற்கனவே கிருஷ்ணகிரி மற்றும் உளுந்தூர் பேட்டை வழியாக போதுமான அளவுக்கு சாலைகள் உள்ளன. தற்போது விமான சேவையும் தொடங்கப்பட்டு இருக்கிறது. எனவே, சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டம் தேவை இல்லாதது. இதற்காக அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக நிலங்களை கையகப்படுத்துகின்றனர். அவர்களுடைய செயல் சட்டவிரோதமானது.

இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுகின்றனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய் வீணாக செலவிடப்பட உள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பிட்டு, அப்பணிகளை முடிக்காமல் நடைபெறும் பசுமை வழிச்சாலை திட்டப்பணிகளுக்கும், அதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருக்கிறார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story