ராகுல்காந்தி நினைத்தால் 7 தமிழர்களும் விடுதலை ஆவார்கள் டாக்டர் ராமதாஸ் அறிக்கை


ராகுல்காந்தி நினைத்தால் 7 தமிழர்களும் விடுதலை ஆவார்கள் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 12 July 2018 5:27 PM GMT (Updated: 2018-07-12T22:57:47+05:30)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களும் ராகுல்காந்தி நினைத்தால் விடுதலை ஆவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். டெல்லியில் தம்மை சந்தித்த இயக்குனர் ரஞ்சித்திடம் இவ்வாறு அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராகுல்காந்தியின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. அவர் நினைத்தால் 7 தமிழர்களும் நிச்சயமாக விடுதலை ஆவார்கள்.

குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால், அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சலுகைகளை வேண்டுமானாலும் வழங்க முடியும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில், அதை ரத்து செய்யும்படி ராஜீவ்காந்தியின் மனைவியும், அப்போதைய காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தி கேட்டுக்கொண்டதால் தான் அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தமிழக கவர்னர் ஆணையிட்டார்.

அதேபோல், இப்போதும் ராகுல்காந்தி, அவரது தாயார் சோனியாகாந்தி, சகோதரி பிரியங்கா ஆகிய மூவரும் இதுகுறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. உண்மையில் ராஜீவ்காந்தி கொலைக்கும், 7 தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

சட்டப்படி பார்த்தாலும், தர்மத்தின்படி பார்த்தாலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் ராகுல்காந்தி கடிதம் எழுத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story