யூ டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: கர்ப்பிணி பலி; கணவர் மீது வழக்கு பதிவு


யூ டியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்:  கர்ப்பிணி பலி; கணவர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 26 July 2018 5:32 AM GMT (Updated: 26 July 2018 5:32 AM GMT)

யூ டியூப்பினை பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்ததில் கர்ப்பிணி ஒருவர் பலியான சம்பவத்தில் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருப்பூர்,

கடந்த காலங்களில் தாய் வீடுகளில் பிரசவம் நடக்கும். தற்போது மருத்துவம் வளர்ந்து விட்ட நிலையில் வீடுகளில் பிரசவம் என்பது சுத்தமாக நின்றுபோனது.

அனைத்து பிரசவங்களும் ஆஸ்பத்திரிகளில் நடக்கிறது. கிராமங்களில் உள்ள பெண்கள் கூட மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்று கருதும் நிலையில், திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியைக்கு வீட்டிலேயே பிரசவம் செய்ததில் அவர் பலியான அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
 
திருப்பூர் காங்கேயம் ரோடு புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா (28). விஜயாபுரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு டிமானி (3) என்ற பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் கிருத்திகா, 2-வது முறையாக கர்ப்பமானார். அதை தொடர்ந்து கிருத்திகா, சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்பினார். இதற்காக கிருத்திகா ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல் இருந்து வந்துள்ளார். மேலும் சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளத்தில் உள்ள தகவல்படி ஒவ்வொரு மாதமும் உணவு உட்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கிருத்திகாவுக்கு கடந்த 22-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர் பிரவீன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். உடனே பிரவீன் தனது மனைவியுடன், கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கிருத்திகா வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து சமூக வலைத்தளத்தில் சுகப்பிரசவம் பார்ப்பது பற்றி செல்போனில் தெரிந்து கொண்டு அதன்படி கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கிருத்திகாவின் உடலில் இருந்து அதிக அளவு ரத்தம் வெளியேறிதால் அவர் மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் கிருத்திகாவையும், குழந்தையையும் ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் கார்த்திகேயன் மயக்கம் அடைந்தார்.

ஆனால் கிருத்திகா பெற்றெடுத்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இந்த குழந்தை ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி திருப்பூர் ஊரக போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கிருத்திகாவிற்கு வீட்டில் பிரசவம் பார்த்தது எதற்காக? என்று விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தொடர்ந்து கார்த்திகேயன், அவரது நண்பர் பிரவீன், நண்பரின் மனைவி லாவண்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதுபோன்று வீட்டிலேயே பிரசவம் பார்த்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story